சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தை அடுத்து இலங்கையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின்கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய விதிகளுக்கமையவே கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திருத்தங்களின்படி, வீட்டு பாவனை பிரிவின் கீழ் 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 60 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மாதாந்த மின்கட்டணம் 85 ரூபாவினாலும், 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட பிரிவுகளுக்கான மின்கட்டணம் 240 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மாதாந்தம் 90 அலகுகளுக்கும் குறைவான மின்பாவனையை கொண்ட வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரிவுகளின் கீழ் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்ததால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது. அதனடிப்படையிலேயே அடுத்த கட்ட கடன் விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.