Tamil News
Home ஆய்வுகள் சர்வதேச குழந்தைகள் தினம் -தாயக சிறுவர்களின் நிலை என்ன?

சர்வதேச குழந்தைகள் தினம் -தாயக சிறுவர்களின் நிலை என்ன?

உலகக் குழந்தைகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், தமிழர் தாயகத்திலுள்ள குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுடைய நிலை மேம்படுத்துவதற்காக நாம் என்ன செய்ய முடியும்? என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

போர் ஏற்படுத்திய நிலைமைகளும், கோவிட் 19 தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளும் தாயகப் பகுதிகளிலுள்ள குழந்தைகளை மோசமாகப் பாதிப்பதால் அவர்கள் விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சர்வதேச குழந்தைகள் தினம் 1954 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாக நிறுவர்களை ஒன்றுதிரட்டுதல், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின்பால் கவனத்தை ஏற்படுத்துவதுதான் இந்தத் தினத்தின் நோக்கம்.

சிறுவர்களின் உரிமைக்கான பிரகடனத்தை 1959 நவம்பர் 20 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. 1989 நவம்பர் 20 இல் குழந்தைகளின் உரிமைக்கான  சாசனம் ஐ.நா. பொதுச் சபையால் வெளியிடப்பட்டது. 1990 முதல் உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச ரீதியாகப் பார்க்கும் போது ‘கோவிட் -19’ தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக சிறுவர்கள் உள்ளனர். நோய்த் தொற்று என்பதை விடவும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டள்ளது அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கின்றது. உளவியல் ரீயியாக இது அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பொழுதுபோக்கு விளையாட்டு என அனைத்தும் தடைப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாகக் காணப்படும் இந்த நிலை தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றது. போருக்குப் பின்னரான மக்களின் வாழ்வாதாரத்துக்கான பிரச்சினைகள், பெற்றோர் காணாமலாக்கப்பட்டமை, பெற்றோருக்குப் பொருத்தமான வேலையோ, வருமானமோ இல்லாதா நிலை என்பன குழந்தைகளின் கல்வி, போஷாக்கான உணவு, பொழுதுபோக்கு, விளையாட்டு என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உடல், உளப் பாதிப்புக்களுக்கு இவை காரணமாக இருக்கின்றது.

கோவிட் 19 தொற்றுநோயின் பரவல் இந்த நிலையை மேலும் மோசமானதாக்கியுள்ளது. எட்டு மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் இணையவழிக் கல்வியைப் பெறுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்களாக உள்ளனர்.

கணினிகளோ, இணைய இணைப்புக்களோ இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கான திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தொற்றுநோய் காலத்திலும் மாணவர்கள் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா. உலக நாடுகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கின்றது. யுனிசெப் நிறுவனமும் இதே கோரிக்கையை முன்வைத்து, தேவையான உதவிகளையும் செய்து வருகின்றது. ஆனால், தாயகப் பகுதிகளில் – குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு இந்த வசதிகள் போதியளவுக்குச் சென்றடையவில்லை.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

Exit mobile version