சரத் பொன்சேகா பிதட்டலுடன் உண்மையை ஏற்றுக் கொண்டார்-சபா குகதாஸ்

644 Views

தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தின் மூலம் சரத் பொன்சேகா ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் இது குறித்து வெளியிட்ட செய்தியில்,

“ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இறுதிப் போரில் 45000 தமிழர்கள் கொல்லப்படவில்லை 5 தொடக்கம் 6 ஆயிரம் வரையான மக்களே கொல்லப்பட்டனர் எனவும் புரெவி சூறாவளி மாவீரர் தினத்தில் வீசியிருந்த நல்லாய் இருந்திருக்கும் என்றும்  நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றியிருந்தார்.

இவர் உரையாற்றினார் என்பதை விட பிதட்டினார் என்றே கூறலாம். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருந்த போது மாவீரர் தினம் வெகு சிறப்பாக தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றத்தை யாவரும் அறிவார்கள். அந்த நேரத்தில் மௌனமாக இருந்தவர் தற்போது தனது அரசியலுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காகவும் முன்னர் அரைக்கால் சட்டையுடன் இருந்த நினைவையும் மனதில் கொண்டு நன்றாக பிதட்டுகிறார்.

நல்லாட்சி அரசாங்கம் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவயைில் ஏற்றுக் கொண்டு கால நீடிப்பை பெற்ற போதும் இலங்கைப் நாடாளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்ட மூலம் நிறைவேற்றும் போதும் அதற்கு ஆதரவாக இருந்த பொன்சேகா, தற்போது தானே இறுதிப் போரை நடத்தியதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் என்றும் கதை விடுகிறார்.

ஆனால் சரத் பொன்சேகா தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது இறுதிப் போரை தானே நடாத்திதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் எனவும் கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மைத் தொகையை மறைத்து ஆறாயிரம் என ஒப்புதல் செய்தமை உறுதி செய்கின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply