சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமைக்கு விசாரணை கோரி பொலிஸ்மா அதிபருக்கு மனு

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா, பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ்மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
‘சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்’ என்ற விடயத்தின் கீழ் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குறித்த செயற்பாடு கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸ் உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.