சட்டவிரோத கைது நடவடிக்கை அதிகரிப்பு – இலங்கை மனித உரிமை ஆணைக் குழு குற்றச்சாட்டு

கடந்த வருடம், கொரோனா தொற்று பரவல் ஆரம்பமானதை தொடர்ந்து இது வரை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் கோவிட் 19 பரவல் காலத்தின் இடையே, கைது நடவடிக்கையின் கீழ் உள்ள நபர்கள் மற்றும் கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் காவல்துறை அதிபர் சி.டி. விக்ரமத்னவுக்கு  சிறப்பு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுபாடுகள் விதிக்கப்படுவதன் ஊடாக, தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், தமது உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு  அனுமதி தற்காலிகமாக வழங்கப்படாமை காரணமாக அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பு காவலின் கீழ் உள்ள சந்தேக நபர்களின் நலன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், சட்டத்தரணிகளுடன் தொடர்பாடலை முன்னெடுக்க முடியுமான வகையில் செயற்திறன் மிக்க நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன் தமக்கு அறிவிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரண விகிதமும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பல சுகாதார நடைமுறைகள் சுகாதார திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முக கவசம்  அணியாமை உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை மீறும் நுாற்றுக்கணக்காணனோர் தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.