Tamil News
Home செய்திகள் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை: தீவிரமடையும் போராட்டம்

சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை: தீவிரமடையும் போராட்டம்

லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது.  வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் திகதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து  இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை  சுற்றுக்காவல் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அதிபர்   ட்ரம்ப், சுமார் 2,000 இராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை. பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.

போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார். மேலும் அவருடைய நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Exit mobile version