சஜித் ஆதரவுக்கு தமிழரசுக் கட்சி சொல்லப்போகும் காரணம் என்ன? – அகிலன்

TNA Sajith 3 சஜித் ஆதரவுக்கு தமிழரசுக் கட்சி சொல்லப்போகும் காரணம் என்ன? - அகிலன்

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவடைவதற்கு இன்னும் சில தினங் கள் மட்டும்தான் உள்ளது. எதிர்  வரும் புதன்கிழமை 18 ஆம் திகதி மட்டுமே பரப்புரைகளை முன்னெடுக்க முடியும்.  அடுத்த சனிக்கிழமை தோ்தல். தபால் மூலமான வாக்களி ப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தநிலைமையில் தமிழரசு கட்சிக்குள் மீண்டும் குழப்பம்! யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழரசு கட்சி அமைத்த விசேட குழு மீண்டும் கூடி பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்கி றது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ ரசு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி தமிழரசு கட்சியின் மத்திய குழு வவுனியாவில் கூடியபோது, சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது. ஆனால் இந்த தீர்மானம் கட்சியின் சிறப்புக்குழுவில் ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாக இல்லாமல் சுமந்திரனால் எடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட முடிவாகவே இருந்தது. இது குறித்து ஆராய்ந்து முடிவை அறிவிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேடக் குழு கூட்டப்படவும் இல்லை! இது தொடர்பாக அவர்கள் ஆராயவும் இல்லை.

ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு கூடாமலே கடந்த மத்திய குழுவின் கூட்டத்தில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்க ளின் அடிப்படையில் தமிழரசு கட்சியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களும் அது தொடர்பில் கேள்வி எழுப்பப்படவில்லை.

கட்சி யாப்பின் அடிப்படையில், ஒரு தீா்மானத்தை எடுப்பதற்காக நடைமுறைகள் கையா ளப்பட்டுள்ளன என்பதுதான் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவா் சி.வி.கே.சிவஞானத்தின் கருத்து! அதனால் அந்த முடிவை மாற்ற முடியாது என்று அவா் சொல்கின்றாா்.

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரான சிறிதரன் இந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் லண்டனில் இருந்தார். நாடுதிரும்பிய உடனேயே கிளிநொச்சி கிளையின் கூட்டத் தைக் கூட்டி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை மீண்டும் எடுத்தார். அதே வேளையில் சிறிதரன் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்தே விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக என அமைக்கப்பட்ட விசேட குழுவை அவசரமாகக் கூட்டுவது என்று முடிவை தலைவர் மாவை சேனாதிராஜா எடுத்தார்.

அந்த விசேட குழு கூட்டப்படாமலேயே எவ்வாறு தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தது என்ற ஒரு கேள்வியையும் சிறிதரன் கூட்டத்தில் எழுப்பி இருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை வவுனியாவில் அவசரமாக கூடிய சிறப்பு குழு பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாப னங்களை ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை அறிவிப்பது என்று தீர்மானித்தது.  அந்த அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளிவரும்.

38 ஜனாதிபதி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி இருந்தாலும் கூட அதில் சுமார் பத்து வேட்பாளர்கள் மட்டுமே தமது விஞ்ஞாபனங்களை வெளியிட்டு இருக் கின்றார்கள். அதில் ஆறு வேட்பாளர்களின் விஞ்ஞா பனங்கள் தமிழரசு கட்சியின் விசேட குழுவால் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து முரண் பாடான கருத்துக்கள் அந்த விசேட குழுவின் உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்படுகின்றது. சுமந்திரனைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசாவுடன் பேரம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப் பமாகவே இதனை பயன்படுத்த முற்படுகின்றார். சஜித் பிரேமதாசாவின் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கான கால வரையறை ஒன்று தொடர்பாக அவருடன் தான் பேச்சு வார்த்தை நடத்தி அதன் பெரும் பெறுபேறுகளை அடுத்த சந்திப்பில் வெளியிடப்போவதாக அவர் கூறுகின்றார். சுமந்திரனைப் பொறுத்தவரையில், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவில் மாற்றமில்லை. அது முடிந்த முடிவு! அவரது விஞ்ஞா பனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலதிக விளக்கங்களைப் பெற்றுத் தருவது மட்டும்தான் தன்னுடைய பணி என்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.

விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 13 ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த காலவரை யறையைப் பெற்று அதனை விசேட குழுவுக்கு அறிவித்து அதனை அடிப்படையாகக் கொண்டு, சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கான அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு சுமந்திரன் திட்டமிடுகின்றாா். அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13 தான் சஜித்தின் வாக்குறுதி! அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை அமுல் செய்வதாக தோ்தல்  வாக்குறுதியாகச் சொல்வது இலங்கையில் மட்டுமாகத்தான் இருக்கும்!

இதிலும் ஒரு நெருக்கடி இருக்கின்றது. தான் ஜனாதிபதியாக வந்தால், அடுத்த நாளே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்கிறாா் சஜித். அப்படியானல் நவம்பரில் பொதுத் தோ்தல் நடத்தப்படலாம். அதனைத்தொடர்ந்துஉள்ளுராட்சிமன்றங்களுக்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும். நீதிமன்றமே உள்ளுராட்சி மன்றத்தோ்தல்களை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  ஆக, இந்த இரண்டு தோ்தல்களையும் சந்திக்க முன்னா் 13 ஐ சஜித் துாக்கிப் பாா்க்கப்போவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.

ஜனாதிபதித் தோ்தலின் போது சிறுபான்மையினரது வாக்குகள் அவசியம். நாடாளுமன்ற, உள்ளுராட்சிமன்ற, மாகாண சபைத் தோ்தல்களைப் பொறுத்தவரையில் சிங்களக் கட்சிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறைவு. ஆக, ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி என்ற கதைதான் இங்கும் தொடப்போகின்றது. வரலாற்றிலிருந்து அதனைக்கூடவா தமிழர சுக் கட்சித் தலைவா்கள் படிக்காமலிருக்கின்றாா் கள்?

அதேவேளையில் சிவஞானம் சிறிதரனை பொறுத்தவரையில், தமது கைவசம் ஆறு வேட் பாளர்களின் விஞ்ஞாபனங்கள் இருப்பதாக அவர் கூறுகின்றார். அவை தொடர்பாக ஆராயப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அதன் அடிப்படையிலேயே முடிவு அறிவிக்கப்படும் என்பது தான் அவரது நிலைப்பாடாக வெளிப்பட்டது.

கட்சியின் முடிவு எவ்வாறானதாக இருந்தா லும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவில் மாற்றமில்லை என்பதுதான் தன்னுடைய நிலைப்பாடு என்று சிறிதரன் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.

சிறிதரன் கொஞ்சம் தீா்க்க தரிசனமாக, “தொலைநோக்குடன்” சிந்திக்கிறாா் என்பது தெரிகின்றது.  இது ஜனாதிபதி தோ்தலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது முடிந்தவுடன் பொதுத் தோ்தல் வரும் என்பது அவருக்குத் தெரியும். உள்ளுா் அரசியலுக்கு பொதுவேட்பாளருடன் நிற்பதுதான் பாதுகாப்பானது என்பது அவரது கணிப்பு. அத்துடன் தமிழரசுக் கட்சியில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளை தன்னுடன் வைத்திருப்பதற்கும் சுமந்திரனை தனமைப்படுத்தவும் அது அவருக்கு அவசியம்.

தமிழரசுக் கட்சியின் முடிவு அறிவிக்கப்பட முன்னர், கட்சியின் விசேட குழு மீண்டும் கூடி ஆராயும் எனத் தெரிகின்றது. அதில், சுமந்திரன் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பார். கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படாது என்றே கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சஜித்தை ஆதரித்து அவர் எதுவும் செய்யவில்லை என்றால், அதன் பலனை பொதுத் தோ்தலில் அவா்கள் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.