Tamil News
Home செய்திகள் சஜித்துக்கு கொரோனா தொற்றியது எப்படி? விளக்கமளிக்க சபாநாயகரிடம் கிரியெல்ல வலியுறுத்து

சஜித்துக்கு கொரோனா தொற்றியது எப்படி? விளக்கமளிக்க சபாநாயகரிடம் கிரியெல்ல வலியுறுத்து

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்துக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராளுமன்றத்தினுள் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்று சபாநாயகர் கூறியது, எந்த அடிப்படையில் என்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சபாநாயகர் அலுவலகத்திலும், பாராளுமன்ற செயலாளர் மற்றும் உப செயலாளர் அலுவலகங்களில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் கொரோனா அபாயம் இருந்த நிலையில், மே 18ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டன என்றும், அவ்வாறு அமர்வுகளை நடத்தாமல் இருந்திருந்தால் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளைப் பிற்போடுவதற்குப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரிடம் உடன்பட்டாலும், சபாநாயகர் சபை அமர்வுகள் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்துக்கு ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே அரசு கொரோனா அபாயத்துக்கு மத்தியில் சபையைக் கூட்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சஜித் பிரேமதாஸவுக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில், சபாநாயகர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version