கொழும்பு மாநகர சபையில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான முடிவை எட்டுவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலம் வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
‘கொழும்பு மாநகர சபை தவிர்ந்த வேறு உள்ளூராட்சி சபைகளில் இரு தரப்பும் இணைந்து போட்டியிட தயாராக இருந்தால் அதற்கும் 20ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொகுதி அமைப்பாளருமான லக்ஷ்மன் விஜேமான்னவை மாவட்டத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கியதன் காரணமாக இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.இதன்போது கட்சியின் தரப்பினருக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.