கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா

728 Views

இக்கட்டுரையில் வரும் கணிப்பீடுகள் மே மாதம் 31ஆம் திகதிக்கு உட்பட்டவைகள். 

இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஒற்றைக் காரணியாக விளங்கும் கோவிட் -19 நோயின் தாக்கம் எல்லோராலும் உணரப்பட்டு வருகின்ற தருணமிது. இவ்வேளையில் எதிர்பார்த்தது போலவே இந்த நெருக்கடிக்கான தற்காலிக தீர்வாக கோவிட்-19 இற்கான தடுப்பூசிகள் மட்டுமே விளங்குகின்றன என்பதுவும் மறுக்க முடியாதது. இவ்வருடம் ஜூன் 10ஆம் திகதி வரை உலகெங்கும் 2,156,384,616 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணிப்பிடுகிறது. அதாவது  இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி நபரும் இரண்டு தடுப்பூசிகள் பெற வேண்டுமாயின்,  உலக சனத் தொகையில் 14% மானவர்கள் மட்டுமே தடுப்பூசி கிடைக்க பெற்றுள்ளனர். இந்த நோயின் பரவல் தன்மையை தவிர்க்கும் வகையில் குறைந்தது 70-85% மான மக்கள் இத்தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என மருத்துவ ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன. அவ்வாறாயின் இந்நிலையை எட்ட இன்னும் ஐந்து தொடக்கம் ஆறு மடங்கு நாட்கள் அல்லது இரண்டரை வருடங்கள் செல்லலாம். எனினும் இயற்கையாக நோயுற்ற 1.7 பில்லியன் மக்களின் நோயெதிர்ப்பு வல்லமையுடன் குறைந்தது 30% மான நோயேற்படாதவர்கள்  தடுப்பூசியை பெற்று கொள்ளும் போது கோவிட்-19இன் இந்த தாக்கம் குறைவடையும் வாய்ப்பு உள்ளது.

Capture 16 கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா

உதாரணமாக இன்று வரை இஸ்ரேல் 63% மான மக்களுக்கும், பிரித்தானியா 60% மானவர்களுக்கும், அமெரிக்கா 51% மானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கியதன் மூலம் தமது நாடுகளின் கோவிட் -19 நோயாளர் வீதத்தை முறையே 99.8%, 94%, 92.5% வீதத்தால் குறைவடைய செய்துள்ளமை தடுப்பூசிகளின் வினைத்திறனுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. மேலும் உலகளாவிய தொற்று வீதமும் 52% வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் கோவிட-19 காரணமான இறப்பு வீதம் 90% இனால் குறைவடைத்துள்ளதுடன், உலகளாவிய இறப்புக்கள் 24% குறைவடைந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே உலக மக்கள், மற்றும் நாடுகள் விழிப்படைந்து தடுப்பூசி ஏற்றப்படும் வீதத்தினை விரைவாக அதிகரிக்க வேண்டும்.

போதியளவு உற்பத்தியும், விநியோகமும் இல்லாமையால் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் பல நாடுகள் சிரமப்படும் வேளையில், சில நாடுகள் சில தடுப்பூசி வகைகளை கொள்வனவு செய்து விட்டு அல்லது கொள்வனவு ஒப்பந்தங்களை செய்துவிட்டு மறுப்பதும், உரிய முறையில் விநியோகிக்க முடியாமல் காலாவதி ஆக்கி விரயம் செய்வதும் தொடர்வது கவலைக்கு உரியது. குறிப்பாக பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிலை நிதி வளம் இல்லாமையால் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையாகவே தொடர்கிறது. அதிலும் தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதும் கவலைக்குரியது. இந்நிலையில் தடுப்பூசிகள் பற்றியும், அவற்றின் தயாரிப்பு, விலை, கிடைக்க கூடிய அளவு உலகளாவிய தடுப்பூசி வளங்களில் உள்ள சிக்கல்களை கடந்து நிலைமையை வெற்றி கொள்வது எப்படி? புதிய வைரசு உருமாற்றங்களை தவிர்ப்பது எப்படி என்பன பற்றி நாம் ஆய்ந்து அறிவது முக்கியமானதாக உள்ளது.

Capture.JPG 1 6 கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா

உலகெங்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்ற போதும் இன்றளவும் 287 தடுப்பூசி உற்பத்தி முயற்சிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 185 முதல் படிநிலை ஆய்வுகளும் 102 இரண்டாம் மனித பரிசோதனை ஆய்வுகளும் தொடர்கின்றன. இவற்றுள் 19 வகையான தடுப்பூசிகள் மட்டும் அவசர பாவனைக்கான அனுமதி ஆய்வுப் பட்டியலில் உள்ளன. அவற்றுள் 8 வகையான தடுப்பூசிகள் மட்டுமே அவசர பாவனைக்காக அனுமதி பெற்றுள்ளன அவையாவன, பைசர், அஸ்ட்ரா செனிகா (ஐரோப்பிய, மாறும் கொரிய வகை), கோவிசில்ட் (இந்தியா), ஜோன்சன், மொடெர்னா, சினோபார்ம் (சீனா) ஆகியனவாகும். இவற்றுடன் ஸ்புட்னிக் ஏ (ரசியா) அவசர பாவனைக்கு உட்படுத்தப் பட்டாலும் இன்னமும் உலக சுகாதார நிறுவனத்தின் பூரண அனுமதிக்கான ஆவணங்களுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் பின்தங்கிய நாடுகளுக்கான தடுப்பூசியைப் பெற்று வழங்கவென உலக சுகாதார நிறுவனம், சிறுவர்களுக்கான ஐ. நா அமைப்பு (யுனிசெப்), உலக தடுப்பூசி வளங்கள் இணையம் (GAVI) மற்றும் நோய் பரம்பல் தவிர்ப்பு தயாரிப்பு முன்னெடுப்பிற்கான உலக கூட்டமைப்பு (CEPI) என்பன இணைந்து கோவாக்ஸ் வசதி எனும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இதன் மூலம் 92 நடுத்தர மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு 2 பில்லியன் தடுப்பூசிகளை குறைந்த விலையில்  பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் கோவாக்ஸ் திட்டம் ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் இதன் அளவு 3.8 பில்லியன் வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 81 மில்லியன் தடுப்பூசிகள் 131 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை 78 முன்னேறிய நாடுகள் உதவ முன் வந்துள்ளமை உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஓர் பெரும் மாற்றமாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் உலகெங்கும் குறைந்தது 20% மான அதிக தாக்கத்தை எதிர் கொள்ளும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என்றும் இதனால் நோய் பரம்பல் மற்றும் இறப்பு வீதத்தை வெகுவாக குறைக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனங்களும் நம்புகின்றன.

Untitled 1 1 கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா

இன்று வரை உலகெங்கும் 13.6 பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான செயல் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவை சீராக இடம்பெறுமாயின் இவ்வருட இறுதிக்குள் உலகின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் தயாராகி விடும். எனினும் நாடுகளின் அரசியல் தலையீடும், அசமந்தப் போக்கும், மக்களிடையேயான விழிப்புணர்வு இன்மையும் தடுப்பூசி வழங்கல் வீதத்தினை பாதித்து வருவது கவலைக்கு உரியதாகும். இந்நிலைக்கு பொருளாதார சரிவும், மலின அரசியல் செய்யும் நாடுகளின் தலைமைகளும், உரிய அறிவியல் ஆதாரங்களற்ற செய்திகளை பிரசுரிக்கும் ஊடகங்களும் குறிப்பாக சமூக ஊடக வலைத் தளங்களும் தனியாரினால்  உரிய புள்ளி விபரங்கள் மற்றும் விஞ்ஞான நிகழ் தகவுகள் பற்றிய தெளிவின்றி பரப்பப்படும் வதந்திகளும் காரணமாக அமைவது மனிதர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது.

இதனை தகர்க்க அறிவார்ந்த இளைய சமூகம் நாடளாவிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக அரச ஒழுங்கமைப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டவும், அதற்கான மாற்று தொண்டு அடிப்படையிலான செயற்றிட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும். மேலும்  சமூக வலைத் தளங்களினூடும், ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வு கருத்துக்களை பரப்புவதுடன் தம்மாலான நிதி, மனித வலு, நிர்வாக ஒழுங்கு என்பவற்றை ஒழுங்கமைத்து இந்த நோயின் தாக்கத்திலிருந்து தத்தம் நாடுகளை பாதுகாக்க வேண்டியது இளையோரின் கடமை. தனியாக உணவு வழங்கல் செயற்பாடுகளுக்கு சிறிதளவு பணத்தை வழங்கி விட்டு வாழாவிருக்காமல் இதற்கான முன்னெடுப்புகளை இளையோர் தாம் வாழும் நாடுகளிலும் பிற பின்தங்கிய நாடுகளிலும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழத் தமிழர் பட்ட துன்பங்களின் மேல் மேலும் வலி கூட்டி நிற்கும் இந்த கோவிட் -19 நோயின் தாக்கத்தில் இருந்து எம் மக்களை காக்கவும், அவர்கட்கான தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான செயல் திட்டம் ஒன்றை உலக தமிழ் இளையோர் உடன் ஆரம்பிக்க வேண்டும்.

Leave a Reply