கோவிட்-19 கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு கிடையாது-சுகாதார அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்திற்குள் செலுப்படியாகாது என இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,கோரிக்கை விடுத்தார்.

அதே நேரம் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்களை பின்பற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் கோரிக்கைக்கு, பதில் அளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற அமர்வுகளுக்குள், குறித்த வர்த்தமானி செலுப்படியற்றது என கூறினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன், நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்றம் பொது இடம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கோருவது தவறானது என்றார்.

அத்துடன் கோவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளமை குறித்து, தான் கவலை அடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.