Tamil News
Home செய்திகள் கோட்டாவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது; மனோ

கோட்டாவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது; மனோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன் தினம் கோலாகலமாக இடம்பெற்றன. இதன்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து அமைச்சர் மனோவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் கூறுகிறார். எனினும் தேசிய தினத்தில், நாம் கொண்டு வந்த தமிழில் தேசிய கீதம் பாடும் வழமையை மாற்றித் தடை செய்திருக்கிறார்.

அதாவது, தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு தடை செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பேசும்போது, தான் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என கூறுகிறார். ஆனால் நடைமுறையில் சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு, சிங்கள, பெளத்த நாடு என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், மிஸ்டர் பிரசிடென்ட்! நீங்கள் தடை செய்யுங்கள் ஆனால், ஏன் “எல்லோருக்கும் ஜனாதிபதி’ என்ற “பில்ட் – அப்’..? எனவே முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார். இதைத் தமிழ் தலைமைகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறமாட்டார்களா என்றே தமிழ் மக்கள் எண்ணுகின்றனர்.

தமிழ் மக்களின் மனசாட்சியாகவே நான் இங்கு எதிரொலிக்கின்றேன் எனக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகப்பத்தகத்திலும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version