கொழும்பில் எரிந்த கப்பலிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அமில மழை பெய்யும் ஆபத்து

143 Views

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் பரவியிருந்த பாரிய தீ இலங்கை, இந்திய கடற்படை, விமானப் படையினர் ஒரு வாரமாக மேற்கொண்ட பகிரதப் போராட்டத்தின் மூலம் நேற்றைய தினம் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கப்பலிலிருந்து வெளியேறிய பாரிளவிலான புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர இந்த ஆபத்து குறித்து நேற்று கருத்துத் தெரிவித்திருக்கின்றார். தீ பரவிய கப்பலிலிருந்து “நைட்ரோஜின் டியொக்ஸசைட்” (Nitrogen Dioxide) வாயு பெருமளவுக்கு வெளியேறியதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்திருக்கின்றார்.

அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் பெய்யக்கூடும் என அவர் கூறினார். இதனால், வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பல் முற்றாக எரிந்து அதிலிருந்த பெருந்தொகையான கொள்கலன்களும் கடலில் மூழ்கியுள்ளன. எஞ்சியுள்ள கப்பலும் கடலில் முழ்கும் அபாயமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கப்பலில் நேற்றுக் காலையும் தீ பரவியதால் கப்பல் கடலில் மூழ்கும் ஆபத்துள்ளது என்பதுடன், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார்.

10 கொழும்பில் எரிந்த கப்பலிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அமில மழை பெய்யும் ஆபத்துஇதனிடையே, வத்தளையிலிருந்து மாரவில வரையான கடற்கரை பகுதிகளின் நீர் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தீ பற்றிய “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் இருந்து வீழ்ந்த கொள்கலன்களால் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரையான அறிக்கைகளின் பிரகாரம், இதுவரை இரசாயன பதார்த்தங்களினால் பாதிப்புகள் ஏற்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பாலித்த கித்சிறி குறிப்பிட்டார்.

இதேவேளை, திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரப் பகுதியில் கடற்படையினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வௌ்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து பயணித்த “எக்ஸ் – பிரஸ் பெர்ல்” கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ பரவ ஆரம்பித்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த போதே கப்பலில் தீ பரவியது. சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் தீ பரவும் போது, 25 தொன் எத்தனோல், இரசாயனப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் அடங்கிய 1486 கொள்கலன்கள் இருந்தன.

இலங்கை கடற்படையினர், விமானப்படையினர், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும், சீரற்ற வானிலை மற்றும் கப்பலில் இரசாயனப் பொருட்கள் இருந்தமையால் தீயை கட்டுப்படுத்த முடியாது போனதுடன், கப்பலும் முழுமையாக தீக்கிரையானது.

இலங்கை கடற்படையினர், விமானப்படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், பின்னர் இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியிருந்தது. இதற்கமைய இந்திய விமானப் படை விமானம் ஒன்றும், கடற்படைக் கப்பல்கள் சிலவும் தீ அணைப்புப் பணிக்காக களமிறக்கப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே பாரிய தீ நேற்று பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

Leave a Reply