“கொல்வது எங்கள் நோக்கம் அல்ல” – இந்திய பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்டுகள்!

278 Views

சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன கோப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதி உள்ளனர்.

அண்மையில் சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஏராளமானோர் திடீரென பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் பலியாகினர். இந்த சண்டையில் தங்கள் உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாவோயிஸ்டுகள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

தங்கள் நிலம், பெருமை மற்றும் உயிர்களைக் காப்பாற்ற பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மாவோயிஸ்டுகளின் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், மாவோயிஸ்டுகள் மறைப்பதாகவும் சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரின் மூலையில் இருக்கும் இரண்டு முக்கிய மாவட்டங்கள் பிஜாபூர் மற்றும் சுக்மா. இங்கு மாத்வி ஹித்மா என்ற மாவோயிஸ்டு தலைவர் பதுங்கி இருந்து மிகப்பெரிய மாவோஸ்டு படைகளை நிறுவி உள்ளார். இந்த மாவோஸ்டுகளை அழிப்பதற்காக 2,000இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ஜிரகுடெம் கிராமத்திற்கு அருகே சனிக்கிழமை வந்திருந்தனர்.

இதை மோப்பம் பிடித்த சுமார் 400 மாவோயிஸ்ட் படையினர், முகாமின் நான்கு பக்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர். ஏற்கனவே இங்கு அவர்கள் பதுக்கி வைத்து இருந்த ஐஇடி குண்டுகளையும் வெடிக்க செய்திருக்கிறார்கள். இந்த குண்டுகளை வெடிக்க செய்யும் போதே துப்பாக்கி மூலம் தாக்கி உள்ளனர். இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளனர். கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் மீது வீசி உள்ளனர்.

எதிர்பார்க்காத நேரத்தில் சுற்றிவளைத்து தாக்கியதால் மறைய கூட இடம் இல்லாமல் மரங்களுக்கு பின் மறைந்து கொண்டு கடைசி வரை பதில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் வீரர்கள். கடுமையாக போராடிய பாதுகாப்பு படையினர் பின் வீரமரணம் அடைந்துள்ளார்கள். 22 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை பிடித்து வைத்துள்ள மாவோயிஸ்டுகள், மற்றவர்கள் தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளனர். அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை அனுப்பிவைக்குமாறு சத்தீஸ்கர் அரசை வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை நடக்கும் வரை அவர் எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 210 வது கோப்ரா பட்டாலியனின் காவலர் ராகேஷ்வர் சிங்கை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மாவோயிஸ்டுகளின் தண்டகரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் (டி.கே.எஸ்.இசட்) செய்தித் தொடர்பாளர் விகல்ப் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.

மாவோயிஸ்டுகள் தங்கள் அறிக்கையில், பாதுகாவலர்கள் தங்கள் எதிரிகள் அல்ல என்று கூறி, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும் நாங்கள் தற்காப்பிற்காக மட்டுமே பதிலடி கொடுத்தோம்.  இது பாதுகாப்பு வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. துப்பாக்கிச் சண்டையில் 14 துப்பாக்கிகள், 2,000 இற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் பிற உபகரணங்களை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே பழங்குடியினர் ஆர்வலர் சோனி சோரி, ஜவானை சிறைபிடித்திருந்தால் விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “அவர்கள் ஜவானை விடுவிப்பதை தாமதப்படுத்தினால், நானே புதன்கிழமை காட்டை நோக்கிச் செல்வேன், அவரை விடுவிக்க அவர்களுடன் (மாவோயிஸ்டுகள்) பேச முயற்சிப்பேன்” என்று சோரி கூறினார்.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.Leave a Reply