கொரோனா வைரஸ் கொடுமையிலும், பொருளாதாரத் தடைகள்; இனப் படுகொலைகளுக்குச் சமம்: கியூபா

275 Views

தங்கள் நாட்டின் மீது 60 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இந்த கொரோனா கொடூரத்திலும் நீட்டித்து வருவது கொரோனாவை விடவும் கொடூரமானது என்று கியூபாஅமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் கொரோனாக்கு 15 பேர் மரணமடைந்துள்ளனர், 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பொருளாதாரத் தடையினால் தங்கள் நாட்டுக்குத் தேவையான மருத்துவ பொருட்களை வாங்குவதில் கடும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கியூபா நாட்டு சுகாதார அமைச்சக பன்னாட்டு உறவுகள் இயக்குநர் நெஸ்டர் மரிமோன் கூறும்போது, “அமெரிக்காவின் பொருளாதார-நிதித் தடைகள் மிகவும் நியாயமற்றது, ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு ஏற்படுத்திய நீண்ட காலத் தடை ஒன்று உண்டு என்றால் அது கியூபாமீதான தடையாகவே இருக்க முடியும்.

சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளடு, எங்கள் நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரத் தடை கொடூரமானது மற்றும் இனப்படுகொலைக்குச் சமமானது.” என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

முதன் முதலில் கியூபா மீது அக்டோபர் 19, 1960-ல் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. காரணம் அமெரிக்காவின் கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களை கியூபா தேசியமயமாக்கியது. அதிலிருந்து இருநாடுகளுக்கு இடையே கடும் பனிப்போர் இருந்து வருகிறது.

1992- முதல் கியூபாவின் மக்களுக்காக மட்டும் பயன்படும் வகையில் மருந்துகளை அமெரிக்கா அனுமதித்தது. ஆனால் கியூபாவுடன் உறவு வைத்து கொண்டால் அது தங்களை பாதிக்கும் என்று வங்கிகளும் நிறுவனங்களும் அஞ்சி கியூபாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன.

ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தடைகள் இன்னும் இறுகி பிற நாடுகளும் கியூபாவுக்கு பொருட்களை அனுப்ப முடியாதவாறு செய்து விட்டார்.

சமீபமாக சீனாவின் அலிபாபா ஆன்லைன் ஜெயண்ட் நிறுவனம் கியூபாவுக்கு டெஸ்ட் கருவிகள், முகக் கவசங்கள், சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தது, ஆனால் அதைக் கொண்டு வர வேண்டிய அமெரிக்க போக்குவரத்து நிறுவனம் அமெரிக்க தடைகளை மீறிவிடுவோம் என்று அஞ்சி அதை சப்ளை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் கியூபா இந்த பொருட்களை வேறு சந்தைகளிலிருந்து வாங்க நேரிட்டுள்ளதால் விலை இருமடங்கு மும்மடங்கு அதிகமாகியுள்ளது. மேலும் பொருட்களும் தாமதமாக வருகிறது.

இதனால் கியூபாவுக்கு சுமார் 220மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்கிறார் மரிமோன்.

1962 முதல் இந்தத் தடைகளினால் கியூபாவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒக்ஸ்பாம் அறக்கட்டளை அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி இந்த தடைகளை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply