Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸ் – இரண்டு வாரங்களில் 19 பில்லியன் ரூபாய்களை இழந்தது சிறீலங்கா

கொரோனா வைரஸ் – இரண்டு வாரங்களில் 19 பில்லியன் ரூபாய்களை இழந்தது சிறீலங்கா

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் உலகின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. சிறீலங்காவில் உள்ள தமது வங்கி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை மீளப் பெறுவதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களில் சிறீலங்காவில் இருந்து 19.6 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம் சிறீலங்காவில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வைரசின் தாக்கம், உலகின் அவசர சுகாதார நடவடிக்கை என்பன சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவுடன் சிறீலங்கா நெருங்கிய வர்த்தக தொடர்புகளை கொண்டிருப்பதனால், பெருமளவான நுகர்வுப் பொருட்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்து வருகின்றது. தற்போது இந்த வழங்கல்களில் ஏற்படும் தாமதம், உலகப் பொருளாதார பின்னடைவு என்பன கடுமையாக சிறீலங்காவை பாதித்து வருகின்றது.

சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத் துறையும் முற்றாக முடங்கும் நிலையை அடைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள மக்கள் பயணங்களை தவிர்ப்பது ஒருபுறமிருக்க, சீன பயணிகளின் வரவு நிறுத்தப்பட்டதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version