Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது- அருட்தந்தை மா.சத்திவேல்

கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது- அருட்தந்தை மா.சத்திவேல்

இலங்கைக்கு வந்திருக்கின்ற கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது எனத் தெரிவித்த சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல், ஏனெனில் அந்த பேரினவாதமே அரசியல் கைதிகளை சமூகம் நீக்கம் செய்திருக்கின்றது என்றார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது  உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ், உயிரை பாதிக்கும் ஒரு பயங்கர நோயாக உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில் அரசியல் கைதிகளின்  மன நிலையை அது பாதிப்பதாகவும்,  அவர்களுடைய அரசியல் மனநிலையை கொலை செய்கின்ற ஒன்றாகவும் விளங்குகின்றது.

முக்கியமாக அரசியல் கைதிகளினுடைய மனநிலையை தக்க வைப்பதற்கான வெளிச் செயற்பாடுகள் எதுவுமில்லாமல் இருப்பது அவர்களுக்கு மன ரீதியாக பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

அரசியல் கைதிகள் இன்று வெளி உலகளோடும்,  குடும்ப உறவுகளோடும்  எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் இருக்கிறார்கள். இதனைவிட அவர்களின் குடும்பங்களை நினைத்தும் , இந்த கொரோனா காலகட்டத்தில்  அவர்களின் குடும்பங்களுக்கு பசியை  போக்கக்கூடிய ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாகவும் அதைப் பற்றிய அதீத யோசனையில் உள்ளனர்.

இந்நிலையிலே அரசியல் கைதிகளினுடைய குடும்பத்தாரை கவனிக்க வேண்டிய பொறுப்பும்  ஆட்சியாளர்களின்  செயல்பாடுகளில் தான் இருக்கின்றது. ஏனென்றால்  தமிழ் மக்களினுடைய தேசிய அரசியலுக்கு உயிர்துடிப்பாக, உயிர்நாடியாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான்.

அதுமட்டுமல்ல இந்த ஆட்சியாளர்களினுடைய செயற்பாடின் காரணமாகதான்  மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகள் சமூக நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். குடும்ப உறவுகளில் இருந்து தொடர்பு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில்  இந்த கொரோனா காலகட்டத்தில் அரசியல் கைதிகளினுடைய பெற்றோரை, குடும்பத்தினரை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும்  தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் இதையே தம் உறவுகளுக்கு செய்ய வேண்டும் என்பதே அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது” என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version