கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள்: ஜோ பைடன் உத்தரவு

119 Views

கோவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க உளவுத்துறையினரை அது குறித்து 90 நாட்களில் அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த விஷயத்தில் தங்களுடைய முயற்சிகலை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்,” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 16.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 இலட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வூஹானில் உள்ள கடல்சார் உயிரின உணவுச் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக தொடர்புபடுத்திய ஆய்வாளர்கள், அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்தே முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக கருதினர்.

ஆனால், அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின்படி, வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் மூலம் தொடர்பாக அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிபராக பதவி ஏற்றவுடனேயே தொற்று பரவிய விலங்கிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு பரவியதா அல்லது அது ஒரு ஆய்வக சம்பவமா என்பதை விளக்குமாறு அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை அதிபர் கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில், “இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை,” என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் நாடாளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply