Tamil News
Home செய்திகள் கொரோனா தொற்று -GMOA மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா தொற்று -GMOA மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ்  தொடர்பாக இலங்கை மக்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் பாதிப்புக்கள் குறைவு என்று பொது மக்கள் மத்தியில் அநாவசிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பேணாமல் செயற்படுகின்றமையை அவதானிக்க முடிவதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணி உருவானதன் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்ததைப் போன்று குறுகிய காலத்தில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பதிவாகிய மரணங்களில் 50 சதவீதமானோர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள அபாயமான நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் அதன் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு. தொடர்ச்சியாக பதிவாகியுள்ள மரணங்கள் குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, விரைவில் இந்த மரணங்கள் குறித்து பகுப்பாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமின்றி ஏனைய பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாகவே அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version