கொரோனா தொற்றுப் பரவல் இலங்கையில் தீவிரமாகக் கூடும்

132 Views

கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் முதல் அலை சற்று தீவிரம் குறைந்தே இருந்தது. ஆனால் இப்போது கொரோனா தீவிரம், அந்நாட்டின் சுகாதார அமைப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

தற்சமயம், இங்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,000 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது 1000% உயர்வு.

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு, தெற்காசியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள சுகாதார வசதிகள் அனைவரும் அணுகக் கூடியவையாகவும் இலவசமாகவும் உள்ளன. இருந்தும், 2 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் மருத்துவமனைகள் தடுமாறத் தொடங்கியுள்ளன.

பொது மக்கள் சுகாதார நிபுணர் ஷஷிகா பண்டாரா தெரிவிக்கையில், “நோய்த்தொற்றின் தீவிரப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எங்களது திறன் ஒரு வரையறைக்குட்பட்டே உள்ளது. நிச்சயமாக எங்கள் சுகாதார அமைப்பு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் தொற்றுநோய் மேலும் இன்னும் அதிகம் பரவாத வரை மட்டுமே, இந்த அமைப்பு சுமையின்றிச் செயல்பட முடியும்.” என்று கூறினார்.

இப்போது, இலங்கை அரசாங்கம் தொற்றுநோயைத் தடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

புதிய தொற்றின் மரபணு வரிசைமுறை போதுமான அளவு இங்கு அடையாளம் காணப்படவில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் அதிகம் காணப்பட்ட கொரோனா வைரஸின் அதே திரிபுதான், இலங்கையில் வேகமாகப் பரவி வரும் தொற்றுநோய்க்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இலங்கையின் சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரவி ரணன் -எலியா போன்ற வல்லுநர்கள் கூறுகையில்,

B.1.617.2 (இந்தியாவில் காணப்படும் திரிபு) கூட இங்கு ஏப்ரல் மாதம் முதல், அதிக அளவு (50%-க்கும் அதிகமாக) பரவியுள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில், இந்தத் தொற்றுப் பரவல் மிகத் தீவிரமாக இருந்த மே மாதத் தொடக்கத்தில் கூட இரு நாடுகளுக்கும் இடையில் மக்களின் போக்குவரத்து தொடர்ந்து வந்துள்ளது.

இலங்கையிலும் ‘இந்தியா போன்ற நிலைமைகள்’ விரைவில் ஏற்படக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலும் போக்குவரத்தைத் தடை செய்ய, இலங்கை அரசாங்கம் பல வாரங்கள் வரை தயங்கியது.

ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடந்த போது, மக்கள் பலர் தங்கு தடையின்றி இங்குமங்கும் சென்று வந்ததும் பலருக்குக் கவலையளித்தது.

நோய்த் தொற்றைத் தடுப்பதற்காகத் தடுப்பூசி போடுவது தொடர்பாகப் புதிய சிக்கல்களும் இங்கு எழுந்துள்ளன.

தடுப்பூசி வழங்கல் இலங்கையில் தொடங்கியது, ஆனால் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசிக்கு, அந்நாடு, இந்தியாவிலிருந்து வரும் மருந்துகளைத் தான் சார்ந்திருந்தது. ஆனால் இந்தியாவில் நிலைமை மோசமடைந்து வருவதாலும், பொருட்களின் போக்குவரத்தை நிறுத்தியதாலும் தடுப்பூசி நிறுத்தப்பட்டது.

மே 19ஆம் திகதி நிலவரப்படி, மக்கள் தொகையில் ஆறு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றிருந்தனர். அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி எப்போது வரும், இந்த மக்களுக்கு எப்போது இரண்டாவது டோஸ் கிடைக்கும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை உள்ளது.

நன்றி BBC Tamil

Leave a Reply