Tamil News
Home செய்திகள் கொரோனா உயிரிழப்பு 211ஆக உயர்வு – நேற்றைய தினம் 502 பேருக்கு தொற்று

கொரோனா உயிரிழப்பு 211ஆக உயர்வு – நேற்றைய தினம் 502 பேருக்கு தொற்று

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணிவரை 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயது பெண்ணொருவர் கடந்த டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்துக்கு காரணம் கொரோனா தீவிரமடைந்தமையாகும். அடையாளங்காணப்படாத சுமார் 70 – 80 வயது மதிக்கத்தக்க மருதானை பொலிஸ் பிரிவில் ஆணொருவர் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்தார் இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று எனக்கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது ஆணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் நேற்றுச் சனிக்கிழமை உயிரிழந்தார். உயிரிழப்புக்கு காரணம் கொரோனா நிமோனியா நிலையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 502 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 228 பேரும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 83 பேரும் அடங்குவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் 7,433 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 586 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 36 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர். 211 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் அந்தத் திணைக்களம்மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version