கொரோனா தடுப்பில் ட்ரோன் கமரா அடிப்படை மனித உரிமை மீறல் -பி.பொன்ராசா

207 Views

யாழ்ப்பாணத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் தேவையற்று பயணம் செய்பவர்களைக் கண்காணிப்பதற்காக என்ற பெயரில் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்துவது தனிமனித உரிமைகளை மீறும் செயலாகும். எனவே இத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.பொன்ராசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் குளியல் அறைகள் இல்லை.  மக்கள் இன்றும் அவர்களின் வீடுகளில் உள்ள திறந்த கிணறுகளிலேயே குளிக்கின்றனர். இந்நிலையில் ட்ரோன் கமரா பயன்படுத்தப்படுவது அவர்களின் சுய கௌரவத்தை பாதிக்கும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் படையினரை உள்ளடக்கிய ‘பீல்ட் பைக் குறூப்’ எனப்படும் மோட்டார் சைக்கிள் படையணியும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது. இதற்கு மேலாகவும் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் இங்கு இல்லை.

பொதுமக்கள் ஒன்றுகூடும் அலுவலகங்களிலோ நிறுவனங்களிலோ கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவர்களின் அந்தரங்க பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ‘இவ்விடம் கமராவால் கண்காணிக்கப்படுகின்றது’ என விளம்பரப்படுத்தல் வேண்டும் என்பது நடைமுறையாகும்.

இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மக்களின் குடியிருப்புக்கு மேலாக சத்தம் சந்தடி இல்லாமல் ட்ரோன் கமரா சென்று கண்காணித்து புகைப்படங்களை எடுப்பது முறையற்றது என்பதுடன் இது சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்.

எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக கரிசனை எடுத்து இந்த நடைமுறையைக் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Leave a Reply