கொரோனா அதிகரிப்பு –  இலங்கைக்கு WHO எச்சரிக்கை

நாள்தோறும் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சமீபத்திய கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் மருத்துவர் ஒலிவியா நிவேராஸ், இது மிகவும் சவாலான கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள காணொளியில், தொற்று நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் மற்றும் முன்கள பணியாளர்களும்  அரசுடன் இணைந்து அயராது உழைத்து வருவதாக நிவேராஸ் தெரிவித்தார்.

உயிர்களைக் காப்பாற்றவும் வைரஸ் பரவுவலை கட்டுப்படுத்தவும் எல்லா வகையிலும் இலங்கைக்கு உதவ WHO மற்றும் ஐ.நா தயாராக உள்ளன என்று அவர் கூறினார்.

“ஆனால் சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகள் மட்டும் இதை செய்யதுவிட முடியாது,” என்று கூறிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், சுவாச சுகாதாரம் கடைபிடிப்பது, கைகளை கழுவுதல்,   முகமூடி அணிவது மற்றும் உடல்நிலை சரியாக இல்லாவிட்டால் வீட்டில் தங்குவது ஆகியவையும் நோய் தடுப்பு நடவடிக்கையில் அடங்கும் என தெரிவித்தார்.

“நம்மை, நம் குடும்பம் மற்றும் எங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க இந்த பரிந்துரைக்கப்பட்ட நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் நம் பங்கைச் செய்தால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும், ”என்றும் அவர் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான நெருக்கடி இந்த தொற்றுநோயாகும் என்றும்  நிவேரஸ் மேலும் கூறினார்.