கொரோனா அச்சம்- வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது.

இந்த நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேர்வெழுதுவோர் பலர், மாவட்டங்களைக் கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர்  சி.சிறிசற்குணராஜாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து  கொரோனா அச்சம் காரணமாக எழுந்துள்ள நெருக்கடிகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையப் பணிப்பாளருக்குத் துணைவேந்தர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

இதே நேரம், பரீட்சை ஒத்திவைப்பு, மறு திகதியிடல் பற்றிய விபரங்கள் பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணைய வழித் தகவல்களுக்கூடாகவும் வெளியிடப்படும்.

இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் என்றும், பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை 021 222 3612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.