கொரோனாவை கட்டுப்படுத்த இன்றிரவு முதல் 3 நாட்களுக்கு முடக்கப்படுகின்றது இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அசுர வேகத்தால் திணறும் அரசு, இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு முழுநேரப் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு தழுவிய முழு நேரப் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின் றது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும், மேல் மாகாணத்தில் செலுத்தப்படும் கொரோனாத்தடுப்பூசி தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கர்ப்பவதி பெண்கள் மற்றும் நோயாளிகள் அவசர தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும், அதற்குப் பயணத் தடை பொருந்தாது எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

இதேநேரம், நேற்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான பயணத் தடை நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.