Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனாவை அரசியலாக்க வேண்டாம்; டிரம்பிடம் உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவை அரசியலாக்க வேண்டாம்; டிரம்பிடம் உலக சுகாதார நிறுவனம்

கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக உள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். அதனை மறுத்த டெட்ரோஸ், “நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருக்கிறோம். எந்த வித்தியாசமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதியுதவி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கா அளிக்கும் நிதி, உலக சுகாதார நிறுவனத்தின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஆகும்.

இந்நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ, “உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்துவரும் நிதியுதவி மறுபரிசீலனை செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

“அமைப்புகள் முறையாக தங்களது பணியை செய்ய வேண்டும். அவர்களது நோக்கம் என்னவோ அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் ஆலோசகர் கூறுகையில், நோய்த் தொற்றின் ஆரம்ப கட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சீனாவுடன் நெருக்கமாக பணி செய்வது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

“உலக அளவில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம். அமெரிக்கா, சீனாவிடம் இருந்து நேர்மையான தலைமை வேண்டும்,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.

“உலகின் சக்தி மிகுந்த நாடுகள் வழிநடத்த வேண்டும். இதனை அரசியலாக்காதீர்கள்” என புதன்கிழமை அன்று பேசிய அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக செவ்வாயன்று பேசிய டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு மிகுந்த ஆதரவாக, ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த டிரம்ப், “அதிக நிதியுதவி செய்வது அமெரிக்கா என்றாலும், உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. நாங்கள் இதுகுறித்து நிச்சயம் நன்றாக சிந்திப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, டெட்ரோஸ், தொடந்து தங்கள் அமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவாக ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேசியிருந்தார்.

வைரஸ் தொற்று பரவலை “எதிர்பாராத ஒன்று” என்று விவரித்த அவர், இது எவ்வாறு கையாளப்பட்டது என்பதை எதிர்காலத்தில்தான் மதிப்பிட முடியும் என்று தெரிவித்தார்.

“தற்போது சர்வதேச சமூகம் சேர்ந்து ஒற்றுமையோடு வைரஸ் பரவலை தடுக்க பணியாற்ற வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கும், உலக சுகாதார நிறுவனத்திற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

Exit mobile version