பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன் காரணமாக இவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலை மிகவும் மோசமானதாகும்.தேயிலை பெருந்தோட்ட அபிவிருத்திக்கும் நாட்டின் தேசிய வருமான அதிகரிப்பிற்கும் தோள்கொடுத்த இம்மக்கள் தனது இறுதிக்காலத்தில் தமக்குரிய கொடுப்பனவுகளை உரியவாறு பெற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.இந்த முறையற்ற செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவுகளை வழங்க உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெருந்தோட்ட மக்களின் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை தெரிந்த விடயமாகும்.இச்சவால்கள் பல்துறை சார்ந்தாக அமைந்திருக்கின்றன. பொருளாதாரம், கல்வி, அரசியல்,தொழில் நிலை என்று இச்சவால்கள் விரிந்து செல்கின்றன.இம்மக்களின் பொருளாதார நெருக்கடி சகலதுறைசார் பின்னடைவுகளுக்கும் உந்துசக்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலை யில் இம்மக்களின் பொருளாதார பின்னடைவை நீக்கி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் பொருட்டு விசேட உதவிகளை வழங்குவதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.
இதேவேளை கல்வித்துறை பாகுபாடுகள் இம்மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் விசனங்கள் இருந்து வருகின்றன.ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பகிர்வு போன்ற விடயங்கள்தொடர்பில் அதிகமான அதிருப்திகள் நிலவுகின்றன. சமூக அபிவிருத்தியில் அரசியலின் வகிபாகம் அதிகமாகும்.
ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் சமூக மறுமலர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இத்தகைய ஆக்கப்பூர்வமான அரசியல் பிரதிநிதித்துவத்தின் காாரணமாகபல பின்தங்கிய சமூகங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன.இந்நிலையில் இம்மக்களின் சனத்தொகைக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் இது இம்மக்களின் அபிவிருத்திக்கு குந்தகமாக இருந்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் இச்சமூக இளைஞர்கள் பலர் தொழில் வாய்ப்பின்றி காணப்படுகின்ற நிலையில் தொழில்துறை நகர்வுகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமெனவும், தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பெருந்தோட்ட இளைைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட தோட்டத் துறை சார்ந்த தொழில்களும் தற்போது இழுபறி நிலையில் உள்ளன.
இத்தகைய பல சவால்களுக்கு மத்தியில் பெருந்தோட்டங்களின் உயிர்வாழ்விற்கு தன்னையே அர்ப்பணித்த தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வேளையில் அம்மக்களுக்கு உரித்தாகும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் தற்போது இழுபறி நிலைகள் மேலெழுந்துள்ளன.
1958 ம் ஆண்டின் 15 ம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.1958 ம் வருடத்திற்கு முன்பு தனது சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஊழியருக்கு நிதி சார்ந்த நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒழுங்கு முறையான திட்டம் காணப்படவில்லை.இதனால் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தொழிலுக்காக அர்ப்பணிப்பு செய்த தொழிலாளர்கள் பிற்காலத்தில் பல்வேறு இன்னல்களையும் அனுபவிக்க நேர்ந்தது.இந்நிலையில் ஊழியர் சேமலாப நிதியமானது தொழில் தருநர், தொழில் புரிவோர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையேயான கூட்டுறவினால் தொழில் புரிவோருடைய எதிர்கால அபிவிருத்தியின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நிதியமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங் கத்தில் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஓய்வூதிய சம்பள நிதியத்திற்கு உரித்துகள் பெறாத எந்தவொரு ஊழியரும் ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுவார்.ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு முழுமையாக தொழில்தருநரின் பொறுப்பாக இருந்த போதிலும் அது சரியாக செய்யப்படாவிட்டால் அதுபற்றி தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் ஊழியருடைய பொறுப்பாகும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
$ ஊழியர் நம்பிக்கை நிதியம்
இதேவேளை ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்களை நீக்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதியச்சட்டம் 1980 ம் வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளுக்கு மேலாக, ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து நன்மைகளை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும்.
யாராவதொரு ஊழியரின் சேவைக்காலம் முடிவுறும்போது அல்லது திடீர் விபத்து அல்லது சுகவீனம் காரணமான நிலைமைகள் காரணமாக தொடர்ந்தும் சேவையாற்ற முடியாதவிடத்து ஊழியர் நம்பிக்கை நிதியத்திடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்காக வயதெல்லை நிர்ணயிக்கப்படவில்லை.
ஊழியர் ஒருவர் அகால மரணமடைவாராயின் அவரால் பெயர் குறிப்பிடப்பட்ட நபருக்கு அல்லது அப்படியான ஒருவர் இல்லாதவிடத்து மரணமடைந்தவரின் உரிமைக்காரருக்கு நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படும். ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு சரியான முறையில் சந்தாப்பணம் செலுத்தப்படுகின்றதா? என்று பரீட்சித்து பார்ப்பதற்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.சரியான முறையில் சந்தாப்பணம் செலுத்தாத தொழில் தருநர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தொடுப்பதற்கு இந்த உத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் உள்ளதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.
இந்தவகையில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன தொழிலாளர்களின் உயிர் மூச்சைப் போன்றதாகும்.அவர்கள் இறுதிக்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இந்நிதிகள் தோள் கொடுக்கின்றன.பிறரிடம் கையேந்தி, அவர்களில் தங்கி வாழும் நிலைக்கும் இவை முற்றுப்புள்ளி வைக்கின்றன.
இந்நிலையில் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் தருவாயில் இந்நிதிகளை முறைப்படி அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். எனினும இந்நடவடிக்கை உரியவாறு இடம்பெறுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதில் பல குளறுபடிகள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது.
450 க்கும் அதிகமான பெருந்தோட்டங்களை பிராந்திய கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.இதேவேளை இன்னும் சில தோட்டங்களை அரசாங்க நிறுவனங்களான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை,அரச பெருந்தோட்ட யாக்கம் போன்றன நிர்வகிக்கின்றன.இத்தோட்டங்களி லுள்ள தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைகாலப்பணம் என்பன சுமார் 1800 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக கடந்தகால அறிக்கையொன்று வலியுறுத்துகின்றது.சுமார் 7000 தொடக்கம் 10000 தொழிலாளர்கள் இதனால் பாதிப்பை எதிர்நோக்கி இருந்தனர்.
மேற்படி தோட்டங்களில் பல கண்டி, மாத்தளை மாவட்டங்களிலேயே அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இத்தகைய சில தோட்டங்களில் தொழிலாளர்களிடம் அறவிடப்பட்ட தொகை மத்திய வங்கியில் உரியவாறு வைப்பில் இடப்படவில்லை என்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சில தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூரமும் இடம்பெற்றுள்ளமை வேதனைக்குரியது.
இந்நிலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையி ல் மலையக அரசியல்வாதிகள் இது குறித்து கவனமெடுத்து அமைச்சரவை ஊடாக அழுத்தம் கொடுத்து ஒரு சாத்தியமான தீர்மானத்திற்கு வருவதே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமையை உறுதி செய்வதற்கு சிறந்த வழியாகும் என்ற வலியுறுத்தல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 700 மில்லியன் ஓய்வூதிய நிதி போதுமான ஆதாரங்கள் இன்றி மத்திய வங்கியில் தேங்கிக் கிடப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார். நுவரெலியா,கண்டி, மாத்தளை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் மக்கள் பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றின் கீழ் தொழில் புரியும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் கிடப்பில் இருந்து வருகின்றன.இந்த மக்களின் ஊழியர் சேமலாப நிதி நம்பிக்கை பொறுப்பு நிதி என்பன இதுவரை மக்களிடம் சென்றடையவில்லை.இது தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு உரிய தரப்பினருக்கு அந்த நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றைப் பெற்றுக் கொள்வது உழைப்போரின் உரிமையாகும்.என்றபோதும் இவற்றை பெற்றுக் கொள்வதில் காணப்படும் குளறுபடிகள், இழுத்தடிப்புகள் என்பன தொழிலாளர்களை விரக்தி நிலைக்கு இட்டுச்சென்றிருக்கின்றன.இது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதியாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
எனவே இத்தகைய இழுத்தடிப்புகள் இல்லாதொழிக்கப்பட்டு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை உரியவாறு தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள தொழில்தருநர்கள் ஒத்துழைக்க வேண்டும்.தொழிற்சங்கங்களுடன் இணைந்துபெருந்தோட்டங்களில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளும் இவ்விடயத்தில் சரியான வழிகாட்டுதல்களை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.