தமிழரசு கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுடன் அணுகுவது குறித்து கூட்டாக கலந்துரையாடப்படும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், நகர சபைகளில் தவிசாளர் பதவிகளுக்கு போட்டியிடும் போது தமிழ் தேசிய கட்சிகளின் வெற்றியை பறிக்கும் வகையில் தங்களது செயற்பாடு அமையாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த உள்ளுராட்சித் தேர்தலை தனியே சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தது. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பேரவையுடன் தேர்தலுக்குப் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து பேசியிருந்தனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்த் தேசிய பேரவை இத்தேர்தலில் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய மூன்று சபைகளில் அதிகூடிய வாக்குகளுடன் வென்றிருக்கிறது’. ‘ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை வகிக்கிறது’. ‘அந்த வகையில் இந்த நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஏனைய சபைகள் குறித்து இதுவரை மற்ற கட்சிகளுடன் எவ்வித புரிந்துணர்வும் எட்டப்படாத நிலையில், குறித்த சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை எடுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கோரப்படும் சபைகளில் ஆதரவு வழங்குவது என்றும், ஆதரவு கோரப்படாத இடங்களில் தமிழ்த் தேசியக் கட்சிக்களுக்கு எதிராக போட்டியிடாமல் இருப்பது என்றும் தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.