தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனையும், பிரதம கொரடாவாக த.சித்தார்த்தனையும் நியமிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்றிரவு நடைபெற்ற போதே இந்த மாற்றங்களைச் செய்வதற்கான இணக்கத்தை சம்பந்தன் தெரிவித்தார். இந்தியத் தூதுவருடனான சந்திப்பைத் தொடர்ந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரோடு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு சுமந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தாயினும், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. சிறீதரன் நேற்றிரவு யாழ்ப்பாணம் திரும்பிவிட்டார். இந்த நிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத நிலையிலேயே நேற்றைய கூட்டம் இடம்பெற்றது.
மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது எனவும் நேற்றிரவு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.