குற்றமிழைத்தவர்களிடமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்கிறார் சிறிதரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் நடக்குமாயின் தமிழர் மீதான வன்முறை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தவறிழைத்த தரப்பினரினாலேயே நீதி வழங்கப்படுவது எந்தவகையில் நியாயமானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை தங்களது தரப்பு கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.