குற்றச்சாட்டுக்கள் தொடா்பாக உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் – கஜேந்திரன் கோரிக்கை

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிக்கும் வைத்தியர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள பேரம் பேசும் வைத்தியர் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சராக இருந்த வைத்தியரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் வைத்தியர் ஆகியோர் தொடர்பில் அரசும் சுகாதார அமைச்சும் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தனார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து பேசுகையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி வைத்தியசாலையில் தங்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதில்லை என்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்னர் குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சராக பணியாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அங்கு நடைபெற்ற ஊழல்கள் தொடர்பிலும் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுத்து அந்த வைத்தியசாலையின்
உரிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள அரசும் சுகாதார அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினாா்.

தொடா்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரன், “அங்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் அநாவசியமாக அங்கிருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வைத்தியசாலையில் எல்லா நேரங்களிலும் மற்றும் இரவு நேரங்களிலும் வைத்தியர்கள் இருப்பதிலல்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தாா்.

“சாவகச்சேரி வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு முன்னர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை அலகு அமைக்கப்பட்ட போதும் அதற்கான பணியாட்தொகுதி நியமிக்கப்படவில்லை. அதற்கு தேவையான இயந்திர உபகரணங்கள் தென்மாராட்சி அபிவிருத்தி ஒன்றியம் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி பங்களிப்புடன் கையளிக்கப்பட்டுள்ளன. 11 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் அவை பயன்படுத்தப்படாது பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது” என்று செல்வராஜா கஜேந்திரன் சுட்டிக்காட்டினாா்.