Home செய்திகள் குருந்தூர் மலை குறித்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் – துரைராசா ரவிகரன்

குருந்தூர் மலை குறித்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் – துரைராசா ரவிகரன்

குருந்தூர் மலை விடயத்தில் சைவ மதரீதியாக வழிபாடு செய்வதற்கும், அங்கு பொங்கல் பூஜைகள் செய்வதற்கும் குறித்த பகுதி விடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு குறித்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பவர் என்ற ரீதியில் இலக்கு  செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு இருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

IMG 20210130 155555 குருந்தூர் மலை குறித்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் - துரைராசா ரவிகரன்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவு சகல வளங்களும் ஒருங்கே அமைந்த தனித் தமிழர்கள் வாழ்ந்த மாவட்டம். பூர்விகமாக தமிழர்கள் வாழ்ந்த தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை, அரசாங்கமானது பல திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து பௌத்த, சிங்கள, மயமாக்கலுக்கான முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் வன இலாகா, வன ஜீவராசிகள், தொல்லியல், மகாவலி எல் அடுத்து தனி சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கப்பட்ட வெலிஓயா மற்றும் படையினர் மூலமாக அபகரிக்கப்பட்ட இடங்கள் இல்மனைற்றுக்காக அபகரிக்கப்பட்ட பகுதிகள் என பல வழிகளிலும் தமிழர்களுடைய நிலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபகரிக்கப் படுகின்றது.

 என்னுடைய கணிப்பின்படி ஒரு இலட்சத்து ஆறாயிரத்து நூறு ஏக்கருக்கு மேல் தமிழர்களுடைய இடங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டது. இது தவிர, மதரீதியாக, எம்மை அடக்கி ஆளும் நடவடிக்கைகள் கூட, தீவிரமாக நடைபெறுகின்றன.

அந்த வகையில், குருந்தூர்மலை விடயமாக  2018.09.04 ஆம் திகதி புத்தர் சிலையுடன், இரண்டு பிக்குமார் உட்பட பனிரெண்டு பேர் குறித்த பகுதிக்குச் சென்ற போது குமுழமுனை, ஆறுமுகத்தான் குளம், தண்ணிமுறிப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்களும், நான் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து   அவர்களை தடுத்து நிறுத்தினோம்.

இருந்தும்  இது தொடர்பாக  காவல்துறையினர்   2018.09.06 ஆம் திகதி வழக்கு தொடுத்திருந்தனர். 2018.09.27 ஆம் திகதி வழக்கிற்கு தவணையிடப் பட்டிருந்தது.  பின் இந்த வழக்கில் 2018.10.01 ஆம் திகதி  நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பில், யாழ் தொல்லியல் சம்பந்தப்பட்ட திணைக்களங்களோடு சேர்ந்து இந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2021.01.18 ஆம் திகதி தொல்லியல் துறை இராஜாங்க அமைச்சர் இராணுவ குவியலோடு அங்கு வந்து ஆராய்ச்சிக்கான நடவடிக்கைகளை யாழ் பல்கலைக்கழக துறை சார்ந்தவர்கள் அழைக்கப்படாமல்  ஆரம்பித்தார்.

இது தவிர 2021.01.27 ஆம் திகதி உடனடியாக அந்த சம்பவத்தை ,நாடாளுமன்ற உறுப்பினர்களான நிர்மலநாதன், சிறீதரன் உட்பட என்னுடன் சிலரும் அங்கு சென்று பார்வையிட்ட போது அந்த இடத்தில் எங்களுடைய சைவ சின்னங்கள் எதுவும்  இருக்கவில்லை எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.

இது குறித்து   குறித்த பகுதியில் இருந்த சைவ சின்னங்களை காணவில்லை என  முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தேன்.

2021.01.29 ஆம் திகதி குருந்தூர் மலைக்கு சென்று  காவல் துறையினருக்கு எமது சைவ சின்னங்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதையும் காண்பித்தேன். சைவ சின்னங்கள் அழிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தி கொண்டார்கள்.

இது தவிர, பௌத்த பிக்குமாரோ, தொல்லியல் திணைக்களத்தினரோ அல்லது இராணுவத்தினரோ, இந்த கோவிட் 19 நடவடிக்கைகள்,   பயணத்தடைகளை பொருட்படுத்தாமலும், எங்களுடைய சைவ அடையாளங்கள் இருந்த அந்த குருந்தூர் மலையில், தங்களுடைய மதத்தை திணிக்கும் வேலைகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் 2021.05.10 ஆம் திகதி பல பிக்குமார்களை அங்கே குவித்து இரவிரவாக பிரித்தோதல் நடைபெற்று.

2021.06.13 ஆம் திகதி பிக்குமார் குருந்தூர் மலைக்கு வருகை தந்து ஒரு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டி இருப்பதாக  தகவல் கிடைத்தது.

குருந்தூர் மலை விடயத்தில் எங்களுடைய சைவ மதரீதியாக நாங்கள் சென்று வழிபாடு செய்வதற்கும், எங்களுடைய மக்கள் அங்கு பொங்கல் பூஜைகள் செய்வதற்கும் ஏற்ற வகையில்  குறித்த பகுதி விடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு வழக்கு தாக்கல் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

தற்போதைய நிலைமையால் அந்த வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டு கொண்டு செல்கின்றது. இருந்தாலும் அந்த படிவத்தில் இன்று நான் கையொப்பம் இட்டுவிட்டேன் என மேலும் தெரிவித்திருந்தார்.

Exit mobile version