குருந்தூர் மலையில் விழா எடுக்கலாம்: ‘இறந்த மக்களை நினைவு கூர முடியாதா?’ பி.யானுஜன்

கொரோனா பரவலுக்கு மத்தியில் குருந்தூர் மலையில் புத்தரை அமர்த்தி விழா செய்கிறார்கள் ஆனால், இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது என வவுனியா நகரசபைஉறுப்பினர் பிரபாகரன் யானுஜன்  கவலை தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர்.

அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அந்த இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் போன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது கோவிட்-19 பரவலை முன்னிறுத்தி இறுக்கமான நடைமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. ஆயினும் சமத்துவம் பேணப்படவில்லை. குறிப்பாக அரச நிகழ்வுகள் இடம் பெற்ற வண்ணம் இருக்கிறது.

நேற்றய தினம் இராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் அண்மையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாகவிகாரையில் நிகழ்வினை நடாத்தினார்கள்.

மூவின மக்களும் வாழ்கின்ற இந்த நாட்டிலே சிறுபாண்மையினர் மாத்திரம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது.

அத்துடன் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரி மே18 நாளை நாம் அனுஸ்டித்து வருகின்றோம். ஆனால் வழமைபோலவே அதனை நினைவுகூர்ந்தால் அனைவரையும் கைதுசெய்வோம் என அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த முறை வீடுகளில் அனுஸ்டிக்குமாறு தெரிவித்தாலும் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர்.

எனவே இப்படியான சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளை வன்மையாக கண்டிப்பதோடு இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எமக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.