குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது.

புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள முப்படையினர், முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அவர்கள் குருந்தூர் மலைப் பகுதியில் பந்தல்கள் அமைத்தல்இ தோரணங்கள் கட்டுதல் எனப் பல அலங்கார வேலைகளில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வு குறித்து பொலிஸாருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவினருக்கோ எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று அந்த துறைகள் சார்பில் பேசவல்லவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்நிகழ்வு முழுமையாக இராணுவத்தினராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக உள்ளது என்று தெரியவருகின்றது. சைவ மக்களின் வழிபாட்டிடமாக காணப்பட்ட குருந்தூர்மலை பகுதியில் பௌத்த தொல்லியல்கள் உள்ளன என்று கூறி தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் சிலர் அப்பகுதியை தம்வசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆராய்ச்சிகளை பகிரங்கப்படுத்தாமலேயே, அது பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழர் தரப்பின் வரலாற்றறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பகுதி நாகர்கால சிவன்கோயில் என்று யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுப்பேராசிரியருமான எஸ். பத்மநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் நாட்டில் கொரேனா பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அவசர அவசரமாக குருந்தூர் மலையில் பௌத்த விகாரை புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையேஇ இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கவோ அல்லது அங்கு செல்லவோ தமிழ் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.