குடாநாட்டில் மேலும் மூன்று இடங்களில் சிகிச்சை நிலையங்கள் – இராணுவம் பொறுப்பேற்பு

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரசகளஞ்சிய கட்டடம் என்பவற்றை கொரோனா சிகிச்சை நிலையங்களாக அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர் வடைகின்றது. இந்தநிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சியத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இடவசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ். மாவட்ட அரச களஞ்சியம் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றில் மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.