சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாயிவில் 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட வட்ட வடிவ துளைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உறை கிணறின் உயரம் முக்கால் அடியாகும். அகலம் இரண்டரை அடியாகும். மொத்தம் 5 அடுக்குகள் கொண்ட இந்த உறை கிணறு அகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் அடுக்குகள் நிலத்தில் புதைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியை முழுமையாகத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கண்டு பிடிக்கப்பட்ட உறை கிணறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் சேமித்து வைப்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
அகரத்தில் ஏற்கனவே சிறிய பானைகள், நத்தை ஓடுகள், சங்கு வளையல்கள், தங்க நாணயங்கள் மற்றும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியின் அகழாய்வை ஊக்குவிப்பதிலும், அவற்றை ஆவணப்படுத்துவதிலும் தமிழக அரசு தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. உலகத் தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூபா 12.21 கோடி செலவில் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் தற்போது மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.