Home செய்திகள் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும்  மே 20ஆம் திகதி  பணிகள் ஆரம்பமானது. இதன் போது கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில மட்டும் ஆராய்ச்சிப் பணிகள் தாமதமானது. மே 23 ஆம் திகதி மணலூரிலும், 27ஆம் திகதி கொந்தகையிலும் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஜுன் மாதம் 24ஆம் திகதி நடத்திய அகழாய்வில் மணலூரில் உள்ள அகழியில் அடையாளம் தெரியாத விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது விலங்கின் எலும்பு படிமம் பா்ப்பதற்கு மிகப் பெரியதாக இருந்துள்ளது. இது சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை காணப்படாத மாதிரியான புதிய தோற்றத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த எலும்புக்கூடு ஒருவேளை யாழியாக இருக்கக்கூடுமோ எனக் கருதப்படுகின்றது. பாண்டிய மன்னர்களின் அரண்மனையிலும், கோயில்களிலும் யாழி என்ற விலங்கின் தோற்றங்கள், சிலைகள் காணப்படும். இது குதிரை உடம்பில் சிங்கத் தலை கொண்டதாக காணப்படும். இன்னொன்று யானை முகமும் சிங்க உடலும் உள்ளது போன்று காணப்படும். இது போன்ற உருவங்கள் வரைபடங்களிலும், உருவங்களிலுமே காணப்பட்டது. இப்படியான ஒரு உயிரினம் உள்ளதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

keezhadiarcheologistsanimalbone 1591357308 கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்புஆனால் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடு  நாய், குதிரை, ஆடு, மாடு போன்ற பிராணிகளின் எலும்புக்கூடு அல்ல என்பதை உறுதிப்படுத்தியிருப்பதால், யாழியாக இருக்கக்கூடுமோ என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையின் எலும்புக்கூடு

ஜுன் 19ஆம் திகதி  நடைபெற்ற அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் முழு அளவிலான எலும்புப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு உடல்களும் ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எலும்புக்கூடுகளும் குழந்தைகளின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பெரியவர்களின் எலும்புக்கூடுகள் ஆகும். ஆனால் தற்போது கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒன்று 95 செ.மீற்றர் நீளம் கொண்டது. மற்றொன்று 75செ.மீற்றர் நீளம் கொண்டது.

இந்த எலும்புக்கூடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் தலைகள் மட்டும் இயல்பைவிட பெரிதாக இருக்கின்றது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான சில மாற்றங்கள் காணப்படும் என்று தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. எந்தக் காலத்திற்குரியது என்பது ஆராய்ச்சியின் பின்னனர் தான் தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்குரியதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version