கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான்

789 Views

தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது.

ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையீனம் மற்றும் அரசியல் ரீதியான போட்டிகள் இவ்வாறான சர்வதேச ரீதியான நிலைப்பாடுகளை பாதிக்கும் காரணிகளாக அமைவதற்கான சாத்தியங்கள் காணப்படும். அதேவேளை வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது பௌத்த சிங்களவாதத்தினால் திணிக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க முடியாத நிலையேற்படும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் புறக்காரணிகளை பாதிக்கும் வகையிலான பல்வேறு வகையான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் போராட்ட வரலாற்றினை முற்றாக மாற்றி, தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தினை ஒரு அதிகாரம் படைத்த தனிப்பட்ட தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக காட்டுவதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போராட்டத்தின்போது தமது சுய தேவைக்காக பிரிந்து வந்து கிழக்கு போராளிகளை கொலைக்களத்தில் நிறுத்திக்கொண்டு, சிங்கள பேரினவாதத்திடம் ஒட்டுக்குழுவாக நின்று, ஜோசப் பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகளை கொன்றொழித்ததுடன், கிழக்கில் தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்பட்ட நடுநிலையான புத்திஜீவிகளையும் கொன்றொழித்தவர்கள், இன்று கிழக்கில் இவ்வாறான போராட்டம் தொடர்பான போலியான கருத்துருவாக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கிழக்கில் கருணாவினால் நடாத்தப்பட்ட துரோகச் செயலுக்கு பின்னர், ஏற்பட்ட நிலைமையினை இன்று சிலர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பிரசாரமாக திரிபுபடுத்தி முகப்புத்தகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கருணா விடுதலைப்புலிகளில் மேற்கொண்ட ஊழல்களை மறைப்பதற்காக பிரதேசவாத கருத்துகளை முன்வைத்து, விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்றபோது அன்றைய காலத்தில் தவறான கருத்துகள் கிழக்கு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. எனினும் தலைமைப் பீடத்தினால் அது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கருணா என்னும் தரப்பின் கருத்துகளை மக்கள் உள்வாங்குதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கிழக்கில் சில போராளிகளை வைத்துக்கொண்டு, அவர்களை தவறான முறையில் மூளைச்சலவை செய்து, தமது தேவைக்கு பயன்படுத்திவந்த நிலையில், கிழக்கில் உள்ள விடுதலைப்புலிகள் போராளிகளை மீட்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு, வெருகல் பகுதியூடாக வன்னியிலிருந்து படை தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்டதும் அது தொடர்பான அறிவித்தல்கள் வாகரையில் கருணா பக்கம் இருந்த போராளிகளுக்கு வழங்கப்பட்டன. விலகிச் செல்லுமாறு கோரப்பட்டது. அதனை தொடர்ந்து பலர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பலர் வலுக்கட்டாயமாக விடுதலைப்புலிகளுடன் போராடச் செய்யப்பட்டனர்.

Capture.JPG 1 5 கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் - மட்டு.நகரான்

வெருகல் ஊடாக வாகரைப் பகுதிக்கு வந்த படைப்பிரிவானது, ஜெயந்தன் படைப்பிரிவாகும். அதில் இருந்தவர்கள் முற்றுமுழுதாக கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த போராளிகள். அவர்கள் வாகரைக்குள் நுழையும்போது கூடியளவு தாக்குதல் நடாத்துவதை தவிர்த்தே வந்த நிலையில், ஒரு சில இடங்களில் தாக்குதல் நடாத்தவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர்களினால் உயிரிழப்புகள் இன்றி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவாருங்கள் என்ற கட்டளைக்கு அமைவாக கூடியளவு தாக்குதல் நடாத்துவதை தவிர்த்தபோதும், இராணுவ கட்டளை மையங்களுக்குள் இருந்த கருணா குழுவினாரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடாத்தப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயந்தன் படையணிக்கும் ஏற்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 32 பேர் மரணமானதுடன், ஏனைய போராளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றதும், பெருமளவான போராளிகள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நிலையில் அவர்கள் அன்றைய போர் நிறுத்த கண்காணிப்பு பிரதிநிதிகள் ஊடாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அன்றைய தினம் பல ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு நிலைமைகள் காண்பிக்கப்பட்டதுடன், சரணடைந்த போராளிகள் மற்றும் தாக்குதல் நடைபெற்ற பகுதி மக்களிடம் நேர்காணல்கள் செய்து செய்திகள் வெளியிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்தவேளையில் யாரும் அது தொடர்பில் தவறான கருத்துகளை முன்வைக்கவில்லை.

ஆனால் அந்த தாக்குதல் நடாத்தப்பட்டு 17வருடங்களுக்கு பின்னர் அந்த தாக்குதலை ஒரு படுகொலையாக சித்திரித்து அது மட்டக்களப்பு மக்களுக்கு எதிரான தாக்குதலாக காண்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், பெண் போராளிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் கதைகளை முகநூல் வாயிலாக பரப்பிவருகின்றனர். 2000ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களிடம் இவ்வாறான கருத்துகளை கொண்டுசென்று அவர்களை தமிழ்த் தேசிய பாதையில் செல்லாவிடாமல் செய்யவும், அவர்களை தங்களது வலைகளில் வீழ்த்தி தமது செல்வாக்கினை அதிகரிக்கலாம் என்ற நோக்குடன் செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதுடன், புலம்பெயர்துள்ள சில புலி எதிர்பாளர்கள் மூலமாகவும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழர் போராட்டத்தில் கிழக்கு தமிழர்களின் வீரம் பல்வேறு கோணங்களில் பேசப்படும் நிலையில், அவற்றினை மழுங்கடிக்கும் வகையில் இவ்வாறான புல்லுருவிகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை தகர்த்து, தமிழ்த் தேசியத்தின் வாசல்படியாக கிழக்கு இருக்கின்றது என்பதை சொல்லவேண்டிய கட்டாயம் இன்று அனைவருக்கும் உள்ளது.

இதேபோன்று இன்று தமிழ்த் தேசியத்தின் தந்தையாக இருக்கின்ற தந்தை செல்வா போன்றோரின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோசங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறான கோசங்களையும் இன்று பிள்ளையான் போன்றவர்களின் பின்னால் நிற்பவர்கள் எழுப்பி வருகின்றனர். இதனை நாங்கள் சாதாரண விடயமாக கடந்து செல்ல முடியாது. யுத்தம் நிறைவடைந்து 12வருடங்கள் நிறைவடையும் நிலையில், தற்போதுள்ள இளந்தலைமுறையினருக்கு யுத்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பிலான போதிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகின்றது.

DZmPkhMV4AIDh70 கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் - மட்டு.நகரான்

இதன் காரணமாகவே இன்று அபிவிருத்தியையும் வேலைவாய்ப்பினையும் நோக்கிச் செல்லும் நிலை தமிழ் இளையோர் மத்தியில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியத்தின் பால் பலமான இளைஞர் கட்டமைப்பு கட்டியெழுப்பாத நிலையே இதுவரையில் இருந்து வருகின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பவர்கள் தங்களது ஆசனங்களை தக்கவைப்பதற்கும், தமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமே தமிழ்த் தேசிய அரசியலை பயன்படுத்தும் நிலையிருந்துவருகின்றது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தற்போதைய நிலையானது ஆரோக்கியமில்லாத வகையிலேயே தமிழ்த் தேசியத்திற்கு காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் கிழக்கில் தம்மை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையே இன்றுவரையில் இருந்து வருகின்றது.

பிள்ளையான் போன்றவர்களின் கடந்தகால செயற்பாடுகள் மறைக்கப்பட்டு, தற்போதைய இளந்தலைமுறையினரிடம் ஒரு தலைமையாக காட்டும் முயற்சிகள் முகப்புத்தகங்கள் ஊடாக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான முன்னெடுப்புகளை தடுத்து நிறுத்தி, இவர்களின் முகத்திரைகளை கிளித்தெறிவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இதுவரையில் யாரும் எந்த முயற்சியும் முன்னெடுக்காத நிலையே உள்ளது.

தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழ்த் தேசியம் வாழவேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் வாழவேண்டுமானால், இவ்வாறான போலிகள் தமிழ் மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். இன்று கிழக்கில் தமிழர்களின் நில அக்கிரமிப்புகளை தடுக்கமுடியாத கையாலாகாத நிலையில் உள்ள பிள்ளையான் போன்றவர்களை தமிழ் இளையோர் மத்தியில் செல்லாக்காசுகள் என்பதை வெளிபடுத்துவதற்கான செயற்பாடுகள் இளையோர் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைந்து இளையோர் மத்தியில் இவ்வாறான போலிகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதுவும் கடந்து செல்வோம் என்று கருதினால் எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் மக்கள் பாரிய இடர்பாடுகளுக்குள் செல்லும் நிலையுருவாகும்.

புலம்பெயர்ந்துள்ள கிழக்கு தமிழர்களும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இன்று கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு தமிழ்த் தேசியம் மட்டுமே. அதற்கு எதிராக செயற்படுவது கிழக்கு மாகாண தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடு என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

Leave a Reply