வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது.
இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்கில் எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காது, கிழக்கு தொல்பொருள் செயலணியொன்றை உருவாக்கி அதனை வழிநடத்துவதற்கு பௌத்த மதகுருமாரையும் நியமித்திருந்தனர்.
இது தொடர்பில் வடகிழக்கு தமிழ் மக்களினாலும் சர்வதேச சமூகத்தினாலும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பபப்பட்டிருந்தன. ஆனால் அவற்றினையெல்லாம் புறந்தள்ளி கிழக்கு தொல்பொருள் செயலணியின் செயற்பாட்டினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் திட்டமிட்ட வகையில் நகர்த்தி வருகின்றார்.
கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் இல்லை. கிழக்கு மாகாணம் சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்ற வகையில் காய்களை நகர்த்தி வருகின்றார். அதற்காக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழும் இடங்களில் பௌத்த தொல்லியல் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றினை நேரடியாக அரசாங்கம் செய்யும்போது ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தமிழர்களின் அழுத்தங்களை குறைப்பதற்காக சில பௌத்த பிக்குகளைக் கொண்டு சில முரண்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாகவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பகுதியில் பிக்குகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அமைகின்றன.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தினை பௌத்தர்களின் பூமியாக மாற்ற வேண்டும் என்பதில் பல காலமாக செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், அவரை எதிர்ப்பவர்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டும் வருகின்றார்.
குறிப்பாக மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் என்றும் மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வருகின்றார். கடந்த நல்லாட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை விகாரைக்கு அழைத்து வந்து அவருக்காக பெரும் நிகழ்வினையே ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கில் பௌத்த சிங்கள வாதத்தினை வேரூன்றச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவரும் நிலையில், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக அதனை வேறு வடிவில் வேரூன்றச் செய்யும் செயற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது போரதீவுப்பற்று, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிங்களவர்களை குடியேற்றுவதில் மிகவும் தீவிரமான செயற்பாடுகளை குறித்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கொண்டுவந்த நிலையில், அதனை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் கடமையினை செய்யவிடாது தடுக்கப்பட்டனர். குறித்த தேரர் மீது அதிகாரிகளுக்கு இருந்த அச்சம் காரணமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையினை தட்டிக்கேட்க அரச அதிகாரிகள் அச்சம் கொள்ளும் நிலையேற்பட்டது. குறிப்பாக குறித்த தேரர் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இருக்கும்போதும் அவர்கள் குறைந்தது தாக்குதலை தடுக்ககூட நடவடிக்கையெடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலையே இருந்து வருகின்றது.
அவருக்கு அன்றைய அரசிடம் இருந்த செல்வாக்கு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்து வருகின்றது. அதற்கு காரணம் அவருக்கு அரசாங்கம் பூரண சுதந்திரம் வழங்கியிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இன்று கிழக்கு தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் பல்வேறு அழுத்தங்களும் எதிர்ப்பு குரல்களும் வந்தவண்ணமுள்ள நிலையில், அவற்றினை திசை திருப்பும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடா வெளியில் நடந்த சம்பவத்தினை நோக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். தேர்தல் காலத்தின் போது வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட வேற்றுச்சேனைக்கு பிக்கு ஒருவர் சென்று தொல்பொருள் இடம் என்று கூறி அங்கு எல்லையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து அந்த பிக்குவினை அங்கிருந்து செல்ல வைத்தனர். அதனை தொடர்ந்து மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவது போன்று பாசாங்கு செய்வதைக் கண்ட மக்கள் அவரையும் துரத்தியடித்தனர்.
இவ்வாறான நிலையில் மக்களின் கவனத்தினை திசைதிருப்பி தொல்பொருள் இடங்கள் என தமிழர்களின் பகுதிகளில் எல்லைகள் இடப்பட்டு தமிழர்களின் புராதன இடங்களை பௌத்தர்களின் பூமியாக காட்டுவதற்கான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் தாயகப் பூமியில் உள்ள தமிழர்களின் அடையாளங்களை அழித்து தமது அடையாளங்களை நிறுவும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு செயற்படுகின்றது. இதனை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.
குறிப்பாக பன்குடாவெளி போன்ற நூறுவீதம் தமிழர்கள் வாழும் பகுதியை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக கிழக்கு தொல்பொருள் செயலணி மூலம் தமிழர்கள் முற்றுமுழுதாக வாழும் பகுதிகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை தடங்கல் இன்றி முன்னெடுக்கவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றோரை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. அவர் சென்று மோதல் நடாத்தி விட்டு அப்பகுதியில் ஒரு பதற்ற நிலைமையினை ஏற்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரை நிலைகொள்ளச் செய்வதன் மூலம் தமது நோக்கத்தினை அடையும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வக்கற்ற நிலையிலேயே அரசாங்கத்திற்கு துதிபாடும் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
வடகிழக்கில் தமிழர்களின் ஆதிகால இருப்புக்கான அடையாளங்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அவற்றினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றவர்கள் மூலம் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வரலாற்றினையும் அதன் பொக்கிசங்களையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இன்று உள்ளது.
-மட்டு.நகரான்-