கிழக்கு மாகாணத்தின் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.அந்த வளங்கள் மூலமாக கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் எழுச்சிபெறவேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் வடகிழக்கு இணைந்த தாயகத்தில் கிழக்கு தலைநகராக மிளிரவேண்டும்.அவ்வாறானால் கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இன்று அனைவரது கைகளிலும் உள்ளது.
இந்த இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இந்த இயற்கை வளங்களை எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்வதற்காகவும் நாங்கள் போராடிவரும் நிலையில் எமது வளங்கள் சத்தமில்லாமல் சுரண்டப்படுவதை கண்டும்காணாதவர்கள் போல் இருந்துவருகின்றோம்.
இன்று கிழக்கில் குவிந்திருக்கும் இல்மனைட் என்னும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்காக இன்று அமெரிக்கா,சீனா,இந்தியா என மூன்று வலயங்களாக திருகோணமலை நோக்கி தமது கால்களை பதிக்கமுற்படுகின்றன.
இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமே இனங்காணப்பட்ட இல்மனைட் வளங்கள் இன்று கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டுள்ளன.குறிப்பாக மட்டக்களப்பிலும் அம்பாறை மாவட்டத்திலும் இந்த இல்மனை வளம் கரையோரப்பகுதிகளிலும் அதிலும் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பின் வாகரை,அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் பெருமளவான இல்மனைட் கடற்கரை பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றினைப் பெற்றுக்கொள்வதில் போட்டிகள் நிலவுவதுடன் அவற்றினை கொள்ளையிடுவதற்காக தென்னிலங்கை சக்திகள் பெரும் முனைப்பு காட்டுகின்றன.
அண்மையில் வாகரை பகுதி மக்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வாகரை பகுதியில் தென்னிலங்கையினை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு இல்மனைட் அகழ்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இல்மனைட் மண் அகழப்படுமானால் பாரியளவிலான கடலரிப்புக்கு கிழக்கு மாகாணம் உள்ளாக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.குறிப்பாக வாகரை பிரதேசமானது ஒரு பகுதியில் கடல் பகுதியையும் மறு பகுதியில் நீர்நிலைகளை அதிகளவாக கொண்ட பகுதி என்ற காரணத்தினால் கடலரிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இவ்வாறுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மண் கொள்ளை நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மண் கொள்ளையினால் இன்று ஏறாவூர்ப்பற்றின் பல பகுதிகள் காணாமல்போகும் நிலையில் உள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய வெள்ளப்பெருக்குக்கும் ஆளாகும் நிலைமை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் அதிகளவான காணிகளைக்கொண்ட பகுதியாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது.
விடுதலைப்போராட்ட காலத்தில் ஏறாவூர்ப்பற்று காடு வளர்ப்பு திட்டங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் செய்யப்பட்டு அது வெற்றிபெற்றதன் காரணமாக இயற்கையின் உறைவிடமாக ஏறாவூர்ப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது.சுமார் 695 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பினைக்கொண்ட பகுதியாக காணப்படும் இப்பகுதியின் இயற்கையினை பாதுகாத்த பெருமையும் அதனை அடுத்த சந்ததிக்கு கொடுத்த பெருமையினையும் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.
இலங்கையில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் போன்று இங்கு மணல் கொள்ளையர்களின் செயற்பாடுகள் ஆபத்தானதாக மாற்றம்பெற்றது.ஏறாவூர்ப்பற்றின் பல பகுதிகள் சூறையாடப்பட்டன.இயற்கை எழில்கொஞ்சும் நீர்நிலைகள் அழிக்கப்பட்டதுடன் அவற்றினை மக்கள் பயன்படுத்தமுடியாத சூழ்நிலையேற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான மணல் கொள்ளையென்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி அரசியலாக மாற்றம் பெற்றுள்ளதன் காரணமாக அதனை தடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் தமிழ் தேசியமாகவேயிருந்துவருகின்றது.
அத்துடன் மைலத்தமடு,மாவதனையும் இந்த ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குள்ளேயே வருகின்றது.மாவட்ட அபிவிருத்திக்குழுவில் குறித்த பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையெடுத்தல் மற்றும் குறித்த பகுதியில் பொலிஸ் காவலரண் அமைத்தல் போன்ற முன்மொழிவுகள் செய்யப்பட்டபோதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படாத நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த கட்டுரையினை நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் அங்கு அத்துமீறிய குடியேற்றவாசிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் சார்பில் தெரிவிகப்பட்டது.
தமிழர்களின் வளங்கள் சூiறையாடப்படுகின்றன.அந்த வளங்களை தமிழர்கள் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படாமல் இங்குள்ள வளங்களைக்கொண்டு தென்னிலங்கையினை வளப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வளங்கள் அழிப்பு காரணமாக தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களும் அழிக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன.ஏறாவூர்ப்பற்றில் சோதையன் கட்டு என்னும் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டுவந்த அரண் மண் அகழ்வுக்காக அழிக்கப்படுகின்றது.சோதையன் என்னும் மன்னன் வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த அரண் அமைக்கப்பட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவந்த நிலையில் இந்த அணையினை உடைத்து மண் அகழ்வு செயற்பாடுகள் முன்னெடுப்பதுடன் இதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல உற்பத்தி பொருட்களுக்கு சரியான சந்தைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் அந்த உற்பத்திகளை நிறுத்திவிட்டு வேறு செயற்பாடுகளுக்கு செல்லும் நிலையும் தமிழர்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுவருகின்றது.
இலங்கையில் இரண்டாது அதிகமான மரமுந்திரிகை செய்கைபண்ணப்பட்டுவந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இந்த செய்கையில் ஈடுபடுவோர் மிகவும் குறைந்துவருகின்றனர்.மரமுந்திரிகை செய்கைபண்ணப்பட்டுவந்த சுமார் 1500ஏக்கருக்கும் அதிகமான காணியை இலங்கை இராணுவம் வாகரை பகுதியில் அடைத்து பாரிய இராணுவமுகாம் அமைத்துள்ளது.இதேபோன்று சோளம் செய்கை மற்றும் நிலக்கடலை செய்கை என்பனவற்றிற்கு சரியான சந்தை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் அவற்றினை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் தமிழர்களின் பொருளாதாரத்தினை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகளாகவே பார்க்கவேண்டியுள்ளது.அனைத்து வளங்களும் உள்ளது.அந்த வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டு உற்பத்திகள் முன்னெடுக்கப்படும்போது அதற்கான சந்தைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமானால் கிழக்கின் பொருளாதாரம் முன்னெற்றமடையும்.
கிழக்கின் வளங்களை சரியானமுறையில் பயன்படுத்துவதற்கு தேவையான பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு பாரியம்பரிய மற்றும் நவீன முறைகளிலான உற்பத்திகளும் தொழில்முறைகளும் ஏற்படுத்தப்படவேண்டும்.கிழக்கின் வளங்களை அள்ளிச்சென்று தமது சமூகத்தின் இருப்பினை மட்டும் உயர்த்துவதற்கு சிங்கள அரசுகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழர் தரப்பும் சிந்தனைரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி கிழக்கு நிலைமைகளை ஆராய்ந்து செயற்படமுன்வரவேண்டும்.