Tamil News
Home செய்திகள் கிழக்கில் புதிய மதவாதக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் இணைவு – புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்

கிழக்கில் புதிய மதவாதக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் இணைவு – புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்

“சுப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் கல்முனையை மையமாக கொண்டு இஸ்லாமிய மதவாதக் குழுவொன்று உருவாகி வருகின்றமை தொடர்பில் இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக கலன்தர் லெப்பை மொஹமட் என்ற நபர் செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த அமைப்பின் தலைவர் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்காக சேர்க்கப்பட்ட பணம் ஊடாக, முறையற்ற விதத்தில் இந்த அமைப்பை அவர் ஆரம்பித்துள்ளார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தக் காலப் பகுதியில் குறித்த நபர், வீட்டிற்குள் இருந்தவாறு இஸ்லாமிய மார்க்கத்தை கற்பித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு “சுப்பர் முஸ்லிம்” அமைப்பை ஆரம்பித்து, அதனூடாக இனவாத செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சுமார் 300 வரையான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இப்போதும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலன்தர் லெப்பை மொஹமட், கல்முனையிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளார். அவர் அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனவாத போதனைகளை வழங்கி வருகிறார். பொத்துவில் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் போதனைகள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஷரி ஆ சட்டத்தின் அடிப்படையில், செயல்பட வேண்டும் என்பது இவரது கொள்கையாக உள்ளது. சுப்பர் முஸ்லிம் அமைப்பிலுள்ள உறுப்பினர்கள், தமது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்புகளைப் பேணவும், மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேசமயம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version