கிழக்கின் தமிழ்த்தேசியம் பலமா? பலவீனமா ? – பா.அரியநேத்திரன்

தமிழ்த்தேசியம் என்பது அரசியலுக்கான சொல் லுக்கு அப்பால் ஆத்மார்த்தமான தமிழினத்தின் இருப்புக்கான குறியீட்டுச்சொல். தேசியம் என்பது,  ஒரு இனம், தாம் வாழ்தல் பொருட்டு நீண்டகாலமாக ஒரு பாரம் பரிய நிலத்தில், தனியான மொழி, பண்பாடு, கலாசாரம், பொருண்மிய வளம் பொருந்தியதாக காணப்படுதலாகும்.
அதன் விரிந்த உண்மையான உட்பொருள் இன்னும் விசாலமானது. குறித்த பாரம்பரிய நிலத் தில் அவர்களின்  சொந்த நிலம், ஆகாயம் , கடல், வளிமண்டலம், இயல் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அவர்தம் பழக்க வழக்கம், வழிபாட்டு முறைமைகள் என்று அத்தனை விசேட அம்சங்க ளும்  தேசியத்தின் அர்த்தக் கூறுகளாகும்.
அதன் மெய்ப்பொருள் உணர்த்துவதுதான் தமிழர்கள் தனியான தேசிய இனமாக தம்மை வெளிப்படுத்துவதற்கு காரணம்.இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் மரபு வழித்தாயக பூமி எனப்படுவதன் அர்த்தம், மேற்சொன்ன அடையாளங்களின் பரிணாமப்  படிமுறை யாகும்.
வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல், புதிய அரசமைப் பொன்று வருவது, தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது என்ற கருத்துகள் நிலவுகின்ற போதும், அதற்கான வேலைகள் நடைபெறுவதாக கடந்த 16, வருடங்களாக இல்லை என்பதே உண்மை.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பெற்ற பதின்மூன்றாவது அரச மைப்புத் திருத்தத்தின் வாயிலாக, ஏற்படுத்தப் பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் சரத்துகள், அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987 இலிருந்து இன்றுவரை, அதன் நோக்கம் அர்த்த முள்ள வகையில், அரசியல் விருப்பத்துடன் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படவில்லை.   அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை ஜனாதிபதி  ஜே ஆர் ஜெயவர்தனவும் இல்லை, இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் இல்லை. ஒப் பந்தம் மட்டும் பெயரளவில் உள்ளது செயலில் இல்லை.
தற்போதய தேசிய மக்கள் அரசாங்கம் அப்போது 2006ல் ஜே வி பி ஆக மகிந்த ராஷபக்ச வுக்கு முட்டுக்கொடுத்திருந்த நிலையிலதான் இணைந்த வடகிழக்கு சட்ட ரீதியாக இரண்டாக பிரிக்கப்பட்டதால் 2008ல் கிழக்கு மாகாணசபை தேர்தலை அவசர அவசரமாக நடத்தி கிழக்கு மாகாணசபையை உருவாக்கி தமிழ்தேசிய தேச விரோதிகளான பிள்ளையான் முதலமைச்சராக தெரிவானது வரலாறு.
கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத் தில் இருந்து பிரித்து அல்லது வேறுபடுத்தி கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலை தனித்துவமாக பார்க்க முடியாது இணைந்த வடகிழக்கில் தமிழ்தேசியம் என்பதுதான் நீண்டு நிலைத்து நிற்க கூடிய அரசியல் செல் நெறியாகும்.
1976, மே14ல் தந்தை செல்வா வட்டுக் கோட்டையில் சுதந்திர தமிழீழத்துக்கான தீர்மான மும், 1977,யூலை 21  பொதுத்தேர்தலில் அதற்கான ஆணையும் கிடைத்ததில் இருந்து கிழக்கு மாகா ணம் தமிழ்தேசிய அரசியலில் கூர்மை பெற்றதை ஆய்வுகள் மூலமும் நிருபிக்கலாம் அது தேர்தல் அரசியலாக இருக்கலாம், அல்லது ஈழவிடுதலை போராட்ட அரசியலாக இருக்கலாம் அத்தனை செயல்பாடுகளிலும் தமிழ்த்தேசிய அனைத்து செயற்பாடுகளுக்கும், தலைமை தாங்கி வழி நடத்தியவர்கள் வடமாகாணத்தை சேர்ந்த தலைவர் களே குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த தலைமைக்கு பின்னால் அணிதிரண்டவர்கள் கிழக்கு மாகாண மக்களும், இளைஞர்களும் எந்த வித பிரதேச வேறுபாடுகள் இன்றி தேச விடுதலையை மட்டுமே இலக்காக கொண்டு இதய சுத்தியுடன் கிழக்கு தமிழர்கள் செயல்பட்டனர் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. 2004ல் விடுதலைப்புலிகளின் பிழவு அப் போது ரணிலின் சூழ்ச்சியால் ஏற்பட்டுத்தப் பட்டு கருணா பிரிவு ஏற்பட்ட பின்னர்தான் அதனை மூலதனமாக்கி பிரதேச ரீதியிலான அரசியல் செயல்பாடுகள் பிரதேச வாதமாக கிழக்கில் தோற்றம் பெற்று 2009   மே18க்கு பின்னர் படிப்படியா வளர்ச்சி உற்று தற்போது 16 வருடங்களாக கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக முனைப்புகள் தொடர்ந்தாலும் கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்ட மட்டக்களப்பை சேர்ந்த பா.அரியநேத்திரனுக்கு வடக்கு தமிழ்மக்கள் கூடிய வாக்குகளை (116000) அளித்ததன் மூலம் பிரதேசவாதம் முறியடிக்கப்பட்டது கிழக்கில்தமிழ்த் தேசிய அரசியல் வீழ்ச்சியடையவில்லை என்பது இறுதியாக 2024,செப்டம்பர்,24 பொதுத்தேர்தல் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருபித்துள்ளதை உலகமே அறிந்தது.
இது 2024ல் மட்டுமல்ல 1977க்கு பின்னர் 1989, வரை இடம்பெற்ற தொகுதி முறை தேர்தலாக இருக்கலாம் அல்லது 1989, தொடக்கம் 2024, வரை இடம்பெற்ற விகிதாசார மாவட்ட முறை தேர்தலாக இருக்கலாம் அத்தனை தேர்தல்களிலும் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்சியாக தமிழ்த் தேசிய பலத்தை உறுதி செய்துள்ளது.
ஏனைய திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இனப்பரம்பல் தமிழ் மக்களை விட சிங்கள முஸ்லீம் மக்களின் விகிதாசாரம் தமிழ் மக்களை விடவும் அதிகளவில் உள்ளதால் சில தேர்தல்களில் தமிழர் பிரதிநித்துவம் இல்லாத நிலை இருந்தது எனினும் இறுதியாக 2024, பொதுத்தேர்தலில் வழமை போன்று அம்பாறை, திருகோணமலையில் தலா இரண்டு ஆசனங்களும் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களுமாக மொத்த மாக ஐந்து ஆசனங்கள் கிடைத்து தமிழ்த்தேசியம் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது நடைபெறப்போகும் உள்ளூரா ட்சி சபைத்தேர்தல் முறை கலப்பு தேர்தல் முறை என்பதாலும், வட்டார ரீதியில் வேட்பாளர்கள் கட்சி செல்வாக்கைவிடவும், அந்தந்த வட்டாரத்தில் ஊர், சமூகம், செல்வாக்கு, சேவை, நடத்தை, ஒழுக்கம், என்பன கட்சி செல்வாக்கை விடவும் தனிமனித செல்வாக்கு தாக்கத்தை செலுத்தும். அதேவேளை வேட்பாளர் தெரிவில் தமிழரசுக்கட்சி வெற்றிபெறக்கூடிய தமிழ் தேசிய வாதிகளை தனிநபர்களை ஓரம்கட்டி அவர்களுக்கு தனி ஆதரவு கொடுப்போரை வேட்பாளர்களாக நிறுத்துவதாலும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தமிழரசுக்கட்சி எந்த ஒரு சபைகளையும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலைமை உண்டு.
தமிழரசுக்கட்சிக்கட்சியின் அதிருப்தியாளர் கள் வேறு கட்சிகளிலும், சுயேட்சை குழுக்களிலும், வேறு தமிழ்த்தேசிய கட்சிகளில் பிரிந்து வேட் பாளர்களை நிறுத்தியதாலும் அவர்களாலும் தனித்து எந்த பிரதேச சபைகளையும் கைப்பற்ற முடியாது.
இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தொங்கு நிலையிலேயே பல கட்சி உறுப்பினர்கள் இணைந்து சபைகளை ஆட்சி செய் யும் களச்சூழலே இப்போது உள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தமிழ்த்தேசிய உணர்வுகள் என்பது தொடர்ச்சி யாக உறுதியான நிலையில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் 16, வருடங்களாக தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்ப தமிழரசுக்கட்சியாலோ, அல்லது வேறு தமிழ்தேசிய கட்சிகளாலோ முடிய வில்லை அதனால் இளைஞர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகள் படிப்படியா குறைந்து தொழில், வேலைவாய்ப்பு, வெளிநாட்டு மோகம், என்பன ஒருபுறமும், களியாட்டம், போதைபொருள் பாவனை ( மதுபானம்) என்பன இளைஞர்களை கவரும் நிலைமையாலும் தமிழ்த்தேசிய அரசிய லில் இருந்து சில இளைஞர்கள் விலகி ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தி பக்கம் தாவும் நிலையும் இல்லாமல் இல்லை.
கடந்த பொதுத்தேர்தலில் ஒரு சில தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மதுபானத்தை வழங்கி தமது விருப்பு வாக்குகளை அதிகரித்த சம்பங்களும், பெரும் தொகையில் கோடிக்கணக்கில் நிதியை செலவு செய்த சம்பவங்களும் உண்டு.
இவைகளும் தமிழ்தேசிய அரசியலில் பின்னடைவுக்கு தற்போது காரணமாக மாறி தேர்தல் என்ரால் சலுகை பெறலாம் என்ற மனோநிலையையும் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் ஒருவகை கறையானாக மாறிவருவதை அவதா னிக்க முடிகிறது.