பெருந்தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தனிவீட்டு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. எனினும் இது உரிய சாதக விளைவுகளை பெற்றுக் கொடுக்காத நிலையில் தனிவீட்டு நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இத னால் பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்தும் லயத்து வாழ்க்கையில் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய மான சூழல் காணப்படுகின்றது. இதனிடையே பெருந்தோட்ட லயன்களை கிராமங்களாக மாற்றி யமைக்கும் திட்டம் குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மேடைகளிலும் இது குறித்த பல கருத்து வெளிப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் லயன்களை கிராமங்களாக மாற்றியமைப் பதால் எவ்விதமான நன்மையும் ஏற்படப்போவ தில்லை என்றும் தனிவீட்டுத் திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு பெருந்தோட்டங்களை கிராமங்களாக மாற்றியமைக்கும் நடவடிக் கைக்கு வலுசேர்க்க வேண்டுமென்றும் வலியுறுத் தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிர கடனத்தில் 25 வது உறுப்புரை, ‘ஒவ்வொருவரும் உணவு, அடிப்படை வசதி, மருத்துவ கவனிப்பு, அவசியமான சமூக வேலைகள் உட்பட தமதும், தமது குடும்பத்தினரினதும், உடல் நலத்துக்கும், நல்வாழ்வுக்கும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்கும் உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும், அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும், வாழ்க்கைக்கு வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும் உரித்துடையவராவர் ‘என்று வலியுறுத்து கின்றது. இந்த வகையில் வீடு என்பது தனியே வெயிலுக்கும் மழைக்குமான ஓர் ஒதுங்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் கூட. அங்கேதான் சமூக நாகரிகத்தின் அத்திவாரம் இடப்படுகின்றது. எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம், குடிநீர் வசதி, கழி வகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும், வாசிக்க இடவசதிகளும், மின்சார வசதியும் தேவை. இத்தகைய அடிப் படை வசதிகள் ஆடம்பரமானவையல்ல. சுகாதாரமான ஆரோக்கிய வாழ்க்கைக்கு இவ்வசதி கள் அத்தியாவசியமானவை என்பது புத்திஜீவிகளின் கருத்தாகவுள்ளது. இதேவேளை இந்திய கிராமங்களில் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்பட்டதோடு அங்கே கல்வி அபிவி ருத்தி உள்ளிட்ட பல விடயங்களிலும் முன்னேற்றகர மான ஒரு போக்கு காணப்பட்டதாக ஆய்வின் முடிவுகள் வலியுறுத்தியுள்ளன.
அழிவடையும் அபாயம்
எனினும் பெருந்தோட்ட மக்களின் வீட்டு நிலைமைகள் பூரண திருப்தி தருவதாக இல்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இம்மக்களில் அதிகமானோர் லயத்து வாழ்க் கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலை பல்வேறு தாக்க விளைவுகளுக்கும் அடிப்படையாகி வருகின்றது. குடிநீர் வசதி, மலசலகூட நிலைமைகள் என்பவற்றில் முன்னரைக் காட்டிலும் ஓரளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்றபோதும் இன்னும் முழு மையாக திருப்தி கொள்வதற்கில்லை. 1971 ம் ஆண்டு நடைபெற்ற சமூக, பொருளாதார அளவீட்டின்படி, 85 வீதமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகளில் 89 சதவீதமானவை லயன் வீடுகளேயாகும். தோட்ட மக்களில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு அறை மாத்திரம் கொண்ட வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். 1981/82 ம் ஆண்டுகளில் 31.2 வீதமானோர் ஒரு அறையைக் கொண்ட வீடுகளில் வசித்துள்ளதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.இதேவேளை 1971 ம் ஆண்டில் 2 அறைகளைக் கொண்ட வீடுகளில் 33.3, 3 அறைகளைக் கொண்ட வீடுகளில் 11.8, 4 அறைகளைக் கொண்ட வீடுகளில் 3.0, 5 அறைகளைக் கொண்ட வீடுகளில் 0.9, 6 அறைகளைக் கொண்ட வீடுகளில் 0.9 வீதமானோர் வாழ்ந்து வந்துள்ளனர். இதேவேளை 1981/82 இல் 45.4, 12.8, 7.2 1.6, 1.7 வீதமானோர் முறையே 2,3,4,5,6 அறைகளைக் கொண்ட வீடுகளில் வசித்துள்ளனர்.
1921 ம் ஆண்டிற்கும் 1945 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகளவான வீடு கள் கட்டப்பட்டன. அவை தொடர்ந்து ஒழுங்காக பராமரிக்கப்படாததாலும், பழுதுகள் உடனுக்கு டன் திருத்தப்படாததாலும் பெருமளவான வீடுகள் பயன்பாட்டுக்குப் பொருந்தாமல் போன தாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக 1971 ம் ஆண்டிற்கும் 1981 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந் தோட்ட வீடுகளில் சுமார் 8.1 வீதமானவை அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டது. 1970 ம் ஆண்டு நுகர்வோர் நிதிய அளவீடு இடம்பெற்றது.இவ்வளவீட்டின்படி பெருந்தோட்டங்களில் 75 வீதமானோர் இடநெருக்கடியுடன் வாழ்வதனை அறிந்து கொள்ள முடிந்தது. அத்தோடு 1970 இல் சர்வதேச தொழில் நிறுவனம் மேற்கொண்ட அளவீட்டின் பிரகாரம் தோட்டப் பெண்களின் மிக முக்கிய பிரச்சினை வீடுகளில் போதிய இடவசதியின்மையும், நீர் விநியோக வசதியின் மையும் என்பதனை அறிந்து கொள் ளக் கூடியதாக இருந்தது. 1996 ம் ஆண்டு தகவலொன்றின்படி இரட்டை லயன் காம்பரா 104556, ஒற்றை லயன் காம்பரா 108825, குடிசைகள் தற்காலிக குடில்கள் 22410, தற்காலிக வீடுகள் 35100 என்றவாறு பெருந்தோட்ட எல்லைக்குள் வீடுகள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
தேசிய நீரோட்ட இணைவு
இதேவேளை 2015 ம் ஆண்டின் ஐந்தாண்டு திட்டத்தின் ஊடாக வீடமைப்புக்கு முன்னர் வழங்கிய 50 சதவீத நிதித்தேவையை விட 82 சதவீத தேவைகள் கணிக்கப்பட்டமை மற்றும் இத்திட்டம் முழுமையாக வீடமைப்புத் திட்டத்தை முன்னிலைப்படுத்திய ஒன்றாக காணப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்ட முயற்சிகளோடு வீடமைப்பினைப் பொறுத்தவரை ஒரு தெளிவான கொள்கை உருவாக்கத்தைக் காண முடிகின்றது. 550 சதுர அடி கொண்ட ஒரு தனி வீடொன்று 07 பேர்ச் காணித்துண்டில் அமைக்கப்பட வேண்டுமென்பது கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த காணித் துண்டுக்கு ஒரு தெளிவான காணி உரித்துரிமை வழங்கப்பட வேண்டும் என்ற முடிவும் முக்கியமானது. 2015 ம் ஆண்டுக்கு பின்னால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகள் அனைத் தும் இக்கொள்கைக்கு இணங்கிய ஒன்றாகவே காணப்படுகின்றது. இரட்டைமாடி வீடுகள் நிர்மாணிக்கப்படமாட்டாது என்பது இதன் மறுதலையாகும். தற்போது தெளிவான காணி உரித்துகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கொள்கைப் போக்கில் இன்னுமொரு வளர்ச்சிக் கட்டம் 2015 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சின் பெயர் மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு என மாற்றப்பட்டமையாகும். இப்பெயர் மாற்றத் தின் அடிப்படையில் வீடமைப்புக்கென ஆணைகொண்ட அமைச்சு மலைநாட்டில் புதிய கிராமங்களை உருவாக்க வேண்டுமென ஆணை யிட்டது. இதனடிப்படையில் புதிய கிராமங்களை உருவாக்குகின்ற ஆணைப்படி பழைய லயன் காம்பராக்களை இல்லாதொழிக்க வேண்டும். லயன்களை இல்லாதொழித்து தனித்தனி வீடுகளாக ஒரு கிராமத்திற்குரிய எல்லா வசதிகளுடன் தெளிவான காணி உறுதியுடன் இக்கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். 2017 ம் ஆண்டு இறுதியில் வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சு தேசிய வீடமைப்பு கொள்கை ஒன்றை உருவாக்கி அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இக்கொள்கைப் பிரகடனத்தில் தோட்ட வீடமைப்பு குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொள்கை ரீதியாக தோட்டத் தொழிலாளர்களை அரசாங்க தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவானது தோட்ட வீடமைப்பை, தற்போதைய தோட்டங்களின் எல்லை நிலையிலுள்ள தற்போதைய கிராமங்களில், நிலம் மற்றும் பாதுகாப்பான உரித்துரிமை என்பவற்றை வழங்கி தற்போதுள்ள கிராமங்களோடு ஒருங்கிணைக்கும் முன்மொழி வாகும் என்று முன்னாள் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.வாமதேவன் குறிப்பிடுகின்றார்.
பெருந்தோட்ட மக்கள் லயத்து வாழ்க்கையில் சொல்லொணா துயரங்களை அனுபவி த்து வரும் நிலையில் இதிலிருந்தும் அவர்களை மீட்டெடுத்து தனிவீட்டுக் கலாசாரத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. எனினும் இது உடனடியாக சாத்தியப்படுவதாக இல்லை. ’சாண் ஏறினால் முழம் சறுக்கும்’வகையில் வீடமைப்பு தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே வீடமைப்பு தொடர்பில் ஒரு பொதுக்கொள்கை மலையக கட்சிகளிடையே காணப்படாமையும் வீட மைப்பு நடவடிக்கைகள் இழுபடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் விமர்சனங் கள் உள்ளன. வீடமைப்பு தொடர்பில் ஒரு பொதுக்கொள்கையை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கடப்பாடு மலையக கட்சிகளுக்கு இருக்கின்றது. இதேவேளை இந்திய அரசின் வீடமைப்புத் திட்டம் காலத்துக்குக் காலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதும் இது எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சட்டபூர்வமான காணியுரிமை
இதனிடையே பெருந்தோட்ட லயன்களை கிராமங்களாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மேடைகளிலும் இவ்விடயம் அதிகளவில் பேசுபொருளாகி இருந்தது. பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணியுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். மேலும் ஏற்றுமதிப் பொருளாதாரம், தேயிலை உற்பத்தியை அதிகப்படுத்துதல், விவசாயத்தை நவீனமயப்படுத்துதல், நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்துதல், தொழிற் பேட்டைகளை அமைத்தல், பால் உற்பத்தி மேம்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது வாக்குறுதி வழங்கி இருந்தார்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலும் புதிய கிராமங்கள் தொடர்பான விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. மலையக மக்களுக்கான தனி வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணிகளை வழங்குதல் வேண்டும். தோட்டக் குடியிருப்புக்களை புதிய கிராமங்களாக அங்கீகரித்தல் வேண்டும். தோட்டக் குடி யிருப்புக்களை பொதுநிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தோட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இவ்வுடன்படிக்கையில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
நிபந்தனைகள்
இந்நிலையில் பெருந்தோட்டத்திலுள்ள லயன்களை அப்படியே வைத்துக் கொண்டு கிராமங் கள் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என்றும் தனிவீட்டுக் கலாசாரத்தினை துரிதமாக முன்னெடுத்து அதன் பின்னர் கிராமங்கள் பற்றிப் பேசுவதே பொருத்தமாக இருக்குமென்றும் விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன. இதனிடையே லயன்களை கிராமங்களுக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதுமான புரிதல் இல்லை என்று இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டித்துப் பேசியுள்ளார். மேலும் லயன் அறைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். 1980 களில் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாராளு மன்றத்துக்கு முதல்முறையாக சென்றபோது மலையகத்தில் ஒரு தனிவீடு கூட கிடையாது. ஒவ்வொரு வருடமும் 10,000 வீடுகள் மலையகத்தில் கட்டப்படும் என அமைச்சரவைப் பத்திரமொன்றை சௌமியமூர்த்தி தொண்ட மான் சமர்ப்பித்து அதற்கு அனுமதியும் கிடைக்கப் பெற்றது. அதனடிப்படையில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மறையும் வரையிலான காலப் பகுதிக்குள் 36,000 தனிவீடுகள் மலையகத்தில் கட்டப்பட்டுள்ளன. 2015 ம் ஆண் டின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத் தில் 4,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 44 வருடங்களில் மொத்தமாக 40,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மலையகத் தில் தற்போது 2 இலட்சம் வீடுகள் தேவைப்படு கின்றன. இந்நிலையில் வாக்காளர் அட்டையுள்ள அனைவருக்கும் வீட்டுரிமையை வழங்குவதோடு லயன்களை சுற்றியுள்ள 10 ஏக்கர் காணியை மக்களுக்கு வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தோட்டங்கள் கிராமியக் கட்டமைப்பிற்குள் உள்ளீர்க்கப்படுமிடத்து அதன் சாதக விளைவுகள் அதிகமாகும் என்பதோடு அரச உதவிகள் எமது மக்களை வந்தடைவதற்கும் அது உந்துசக்தியாகும். எனவே தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் முயற்சிக்கு அனைவரும் அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.