கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவின் பென்ரகனைப் போன்று (Pentagon) ரெல் அவிவிலுள்ள கிர்யா (Kirya) என்ற இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் கட்டடத்துக்கு வெளியே அமர்ந்திருந்து, ஒரு கட்டையில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் நிறம் கொண்ட றிபணை துண்டு துண்டாக வெட்டி, அங்கே வழியால் போய்க்கொண்டிருந்தவர்களிடம் அவற்றைக் கொடுத்துக்கொண்டிருந்தார், பேலெட் (Baled). ஹமாசினால் கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்ட அண்ணளவாக 240 பணயக்கைதிகளை அந்த மஞ்சள் நிற றிபண்கள் அங்கு வருவோர் போவோருக்கு நினைவுபடுத்திக்கொண்டிருந்தன.
இந்த றிபண்களைக் கையளித்துக்கொண்டிருந்த பேலெட் இன் மனதில் ஒரு கேள்வி. அதாவது இஸ்ரேலுக்கு வெளியே வாழ்கின்ற மக்களும் பணயக்கைதிகள் தொடர்பாக இஸ்ரேலில் தாங்கள் அனுபவிக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றார்களா? என்பதாகும்.
“மிகவும் தீவிரமான தாராளவாதக் கொள்கையைக் கொண்ட ஒருவனாகவே என்னை நான் கருதுகின்றேன். ஆனால் உலகின் பல்வேறு பாகங்களில் ஹமாசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் அதிகளவில் நடைபெறுவதைப் பார்க்கும் போது, எங்களது மிகச் சிக்கலான சூழ்நிலையை உண்மையில் உலகம் புரிந்துகொள்கின்றதா? என்ற கேள்வி எனக்குள்ளே எழுகிறது. எல்லோரும் இதனை ஒருதலைப்பட்சமாகவே பார்க்கிறார்கள். நீதியையும் அவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் இது மிக எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இல்லை” என்று சிஎன்என் (CNN) ஊடகவியலாளரிடம் அவர் தெரிவித்தார்.
வெவ்வேறு நாடுகளின் அரசுகள் இந்த மிகச் சிக்கலான சூழலைப் புரிந்துகொள்கின்றன. ஆனால் அந்த நாடுகளில் வாழும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்துகொள்கின்றார்களா? என்பது சந்தேகம் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.
காஸாப் பிரதேசத்தில், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குண்டுத்தாக்குதல்களின் காரணமாக, அப்பாவிப் பொதுமக்களின் இறப்பு மிகவும் அதிகமாக நிகழ்வதன் காரணமாக, உலகத் தலைவர்கள் பலர் இஸ்ரேல் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற இந்த நேரத்தில், இலண்டன், வோஷிங்டன் டி.சி., பேளின், பாரிஸ், அம்மான், கைறோ ஆகிய பெருநகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஹமாசுக்கு ஆதரவாக நடைபெறவில்லை. மாறாக காஸாவில் உள்ள அப்பாவிப்பொதுமக்களுக்கு ஆதரவாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் நாட்டில் வாழும் மக்கள் பலர் தற்போதைய சூழ்நிலையில் தமது நிலை சரியாகப் புரிந்துகொள்ளப்படாததையிட்டு விரக்தியடைந்திருக்கிறார்கள். ‘ ‘உலகம் எங்களைப் புரிந்துகொள்ளவில்லை’ என்ற உணர்வு இஸ்ரேல் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் உணரப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
“பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உலகம் எங்களைப் புரிந்துகொள்கின்றது. நாங்கள் பாதிக்கப்படும் போது, நாங்கள் கொல்லப்படும் போது, உலகம் எங்கள் மேல் அநுதாபத்தைக் காண்பிக்கின்றது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் எங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுக்கும் போது உலகம் எங்களைப் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.” என்று சீகல் இற்ஸஹக் ( Sigal Itzahak) சிஎன்என் ஊடகத்துக்குத் தெரிவித்தார்.
யூத மறை தொடர்பாகப் பெண்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு பாடசாலையில், ஆசிரியராகப் பணிபுரிகின்ற இற்ஸஹக், பேலெட் றிபண்களைக் கையளித்துக்கொண்டிருக்கின்ற கிர்யாவுக்கு வெளியேயுள்ள சதுக்கத்துக்கு தனது மாணவர்கள் சிலரை அழைத்துவந்திருந்தார்.
ஒக்ரோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் போன்றவர்கள் ஒன்றுகூடுகின்ற இடமாக இந்தச் சதுக்கம் தற்போது மாற்றமடைந்திருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பான சுவரொட்டிகளாலும், இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்களாலும் மேற்குறிப்பிட்ட அரச கட்டடத் தொகுதி நிறைந்திருக்கிறது.
முகத்தில் புன்னகையுடன் காணப்படும் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள், குழந்தைகள், இராணுவச் சிப்பாய்கள் போன்றவர்களின் படங்களை, நிறையவே அங்கு பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் முழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஒளிப்படங்களையும் அங்கே பார்க்க்கூடியதாக இருக்கின்றது.
ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில், 1400க்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்தது. ஏறக்குறை 240 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஹமாசாலும் ஏனையோராலும் காஸாப் பகுதிகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என, நான்கு பெண்கள் ஹமாசால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரம் இஸ்ரேலின் ஒரு சிப்பாய் இஸ்ரேல் பாதுகாப்புப் படையால் மீட்கப்பட்டிருக்கிறார்.
“எங்களது நிலையில் இருக்கக்கூடிய உலகத்தின் வேறு ஒரு நாடு, தனது பாதுகாப்புக்காக இதை விட அதிகமான நடவடிக்கையை எடுக்கும். யாருமே அதைப் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கமாட்டார்கள். யூத இனத்தைச் சேர்ந்த எங்கள் மீது தான் கண்டனங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. அமைதியாக ஒரு நாட்டில் வாழ யூத இனத்தைச் சேர்ந்தவர்களால் இயலாமல் இருக்கிறது. உண்மையில் அமைதியாக வாழவே நாங்கள் விரும்புகிறோம். மன்னிக்க வேண்டும். இதை யாருமே புரிந்துகொள்வதாக எனக்குத் தெரியவில்லை” என்று இற்ஸஹக் மிகவும் கவலையான தொனியுடன் தெரிவித்தார்.
நெத்தன்யாகு மீது திரும்பும் இஸ்ரேல் மக்களின் கோபம்
பாதிக்கப்பட்டவர்கள் மீது கிர்யா கட்டடத்துக்கு வெளியே, மக்கள் ஒத்துணர்வைக் காண்பிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இறைவனை நோக்கி வேண்டுதல் செய்யவும், ஒருவரை ஒருவர் அணைத்து ஆறுதல் சொல்லவும், ஒரு சில மக்கள் இங்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறார்கள். இற்ஸஹக் இங்கு அழைத்து வந்த மாணவர்களோ, புதிதாக வெதுப்பகத்திலிருந்து எடுக்கப்பட்ட பாண்களை அங்கே எடுத்து வந்திருந்தார்கள். யூத மறையைப் பொறுத்த வரை இது மிகவும் சக்திவாய்ந்த, பொருள் பொதிந்த ஓர் அடையாளமாகும்.
சமூகவியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றிருக்கும் பெனி சுவெய்க், (Benny Zweig) ஹமாசின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது ஹமாசுக்கு எதிரான போரில் முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகுவுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்ற நாளிலிருந்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகக் கூறினார்.
“நெத்தன்யாகுவும் அவரது அரசும் சிறைப்படுத்தப்பட வேண்டும்’ என்ற சுலோகத்தைத் தாங்கி, ஒவ்வொரு நாளும் இரண்டு தடவைகள் நான் எனது ஆர்ப்பாட்டத்தை காலை 10 மணியிலிருந்து 1.00 மணி வரையும், மாலை 5.00 மணியிலிருந்து 8.00 மணி வரையும் மேற்கொண்டு வருகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலில் வாழ்கின்ற பலர் கருதுவதைப் போன்று, சுவெய்க்கும் ஒக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கான பொறுப்பின் ஒரு பகுதியை நெத்தன்யாகு ஏற்க வேண்டும் எனக் கோருகிறார். “எப்போதோ ஹமாசை நாங்கள் தோற்கடித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக கட்டார் நாட்டின் பணம் உள்ளே வர நெத்தன்யாகு அனுமதி வழங்கினார். 2018ம் ஆண்டில் ஹமாசினால் நிர்வகிக்கப்பட்ட காஸாவுக்கு மில்லியன்கள் கணக்கிலான டொலர்களை கட்டார் வழங்க நெத்தன்யாகு அனுமதி வழங்கியிருந்தார்.”
பணத்தைக் கொடுத்து, ஒரு பயங்கரவாதக் குழுவின் நிகழ்ச்சி நிரலை நீங்கள் மாற்றியமைக்க முடியாது. அவர்களைத் தோற்கடிக்க இப்போது அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்று சுவேய்க் கூறினார். ஹமாசின் தாக்குதல் நடைபெற்று இப்போது ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் கடத்திச்செல்லப்பட்ட தனது மகன் இற்றே (Itay)தொடர்பாக றூபி சென்னுக்கு (Ruby Chen) இதுவரை எந்தத தகவலும் கிடைக்கவில்லை, அவரது மூன்று ஆண்பிள்ளைகளில் இற்றே இரண்டாவது பிள்ளை ஆகும். ஓர் முன்னாள் சாரணரான இற்றே மிகச் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் என அறியப்படுகின்றது. ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இற்றே கடத்தப்பட்டார்.
இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்டு, காஸாவில் வைக்கப்பட்டிருக்கும் பலரது குடும்பங்களைப் போன்று, பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டிய அத்தனையையும் இஸ்ரேல் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். போரின் இரண்டாவது இலக்காக அது இருக்கக்கூடாது. பணயக்கைதிகளை விடுவிப்பதே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இலக்காக இருக்க வேண்டும் என்று றூபி சென் வலியுறுத்தினார்.