காவல்துறை காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்றும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாகுவதற்கு வழிவகுக்கிறது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது பற்றி ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குறித்த இளைஞனின் மரணம், கடந்த பல ஆண்டுகளாகப் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி இச்சம்பவமானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் எத்தகைய மோசமான, மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டுமொரு முறை உணர்த்துகிறது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.