காவல்துறையினரின் காவலில் இளைஞன் மரணம்- மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

183 Views

மட்டக்களப்பில்  காவல்துறையினரின் காவலில் மரணமடைந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டியெடுத்து மீளவும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முன்னிலையில் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் 02ம் திகதி காவல்துறையினரின் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த சந்திரன் விதுசன் என்ற 21 வயது இளைஞனின் இறப்புத் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.

மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.

அத் தருணத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தங்களுக்கு நம்பிக்கையில்லையென்றும், புதைக்கப்பட்ட சடலத்தை மீளவும் தோண்டியெடுத்து இத்துறையில் அதிநிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னிலையில் மீளவும்  பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டுமென்று சட்டத்தரணி சுகாஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் சார்பில் விண்ணப்பத்தை  தாக்கல் செய்தார்.

காவல்துறையினர் தரப்பில் பிறிதொரு சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டது. இருதரப்பினரது வாதங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்த மட்டக்களப்பு நீதிவான், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கோரப்பட்டவாறு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பரிசோதிக்க உத்தரவிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை சடலத்தை தோண்டியெடுப்பதற்காக திகதியிட்டுள்ளார்.

Leave a Reply