பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபாவை வழங்கு வதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதேவேளை இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கலாம் எனவும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் இச்சம்பள உயர்வானது சமகாலத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவேனும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் காழ்ப்புணர்ச்சியை மையப்படுத்தி தொழிலாளர்களை திசை திருப்ப எவரும் முற்படுதலாகாது என்பதோடு, இச்சம்பள உயர்வினை சாத்தியப் படுத்திக் கொள்வதற்கும், மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும், அரசியல் மற்றும் கட்சி பேதங் களை மறந்து சகலரும் ஒன்று பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது உழைப்பாளர்களின் கைகளில் தங்கியுள்ளது. உழைப்பாளர்கள் நாட்டை சிருஷ்டிக்கின்றார்கள். பெருந்தோட்ட மக்களும் இதற்கு விதி விலக்காகிவிடவில்லை. இந்நாட்டின் தேசிய வருவாயில் கணிசமான வகிபாகம் அவர்களுக்கு சொந்தமானதாக காணப்படுகின்றது. 1959 இல் இலங்கை அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் வகிபங்கு 59.6 வீதமாக இருந் தது. 1989 இல் 24.3, 1990 இல் 24.9 வீதமாக இவ்வகிபாகம் அமைந்திருந்தது. 1990 கள் வரையில் இலங்கையின் ஏற்றுமதிக்கான வர்த்த கப் பயிர்களில் தேயிலையே முதலிடத்தை வகித்து வந்தது. இதில் பெருந்தோட்டங்களின் பங்களிப்பும் மிகவும் அதிகமாகும். இதேவேளை தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையிலும் பெருந்தோட்டங்கள் பின்நிற்கவில்லை.
1995 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 168.8 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்ட நிலையில் இவ்வருடத்தில் சிறுதோட்ட தேயிலை உற்பத்தி 111.3 மில்லியன் கிலோ கிராம்களாக காணப்பட்டது. எனினும் பின்வந்த காலங்களில் சிறுதோட்டங்களின் ஆதிக்கம் வலுப்பெற்ற நிலையில் பெருந்தோட்டங்கள் பின்தள்ளப்படும் நிலை உருவானது. அத்தோடு இலங்கையின் தேசிய வருமானத்தில் ஆடைத் தொழிற்றுறை, வெளிநாட்டு தொழில், சுற்றுலாத்துறை நிலை மைகள் என்பனவும் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததையும் அவதானிக்கக் கூடிய தாக இருந்தது. எவ்வாறெனினும் இலங்கை தேயிலையின் மவுசு சர்வதேச சந்தையில் இன்னும் குறைந்துவிடவில்லை.
புதிய உத்திகள் தேயிலைத் தொழிற்றுறைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் நீளமானது என்பதோடு ஆழமானதுமாகும். பெருந்தோட்ட சமூகத்தில் பலர் தேயிலைத் தொழிற்றுறையில் நேரடியாக தங்கி இருக்கின்றனர். அத்தோடு மறைமுகமாக இத்தொழிற்றுறையில் பல்லாயிரக்கணக் கானோர் தங்கி வாழ்வதையும் எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே மாற்றுத் தொழில் முயற்சிகள் குறைவாக காணப்படுகின்ற நிலையில் தேயிலைத் தொழில் அடிநாதமாக விளங்குகின்றது. எனவே இத்தொழிற்றுறையை நம்பி வாழும் மக்களுக்கு உரமூட்டும் வகையில் உழைப்பிற்கேற்ற ஊதியம், சிறந்த குடியிருப்பு வசதிகள், மருத்துவ சுகாதார நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு, தொழிற்றுறையில் புதிய உத்திகள் போன்ற பல செயற்பாடுகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. எனினும் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்று வினவுகையில் நிலைமைகள் திருப்தி தருவதாக இல்லை. ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ ஒரு போக்கினையே பெரும்பாலும் அவதானிக்க முடிகின்றது. பெருந்தோட்டத் துறையில் மேற்கண்ட துறைகளில் காணப்படும் பின்னடைவான வெளிப்பாடுகள் இன்றைய இளைஞர் யுவதிகள் அத்துறையில் ஈடுபடுவதற்கு தடைக்கல்லாக இருந்த வருகின்றது என்பதனை யாவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து நாம் நோக்குகின்றபோது இவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பில் தொடர்ச்சியாகவே இழுபறி நிலைமைகள் இருந்து வந்துள்ளன. 1830 களில் ஆரம்பிக்கப் பட்ட பெருந்தோட்டங்கள் 1929 ம் ஆண்டு வரையிலுமான சுமார் 100 வருடங்களாக இங்கு வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கென அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ஒன்றை நிர்ணயிக்கும் சட்டத்தைக் கொண்டுவரவில்லை என்பது முக்கியஸ்தர்களின் கருத்தாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டபோதெல்லாம் இக்கோரிக்கை யானது தோட்ட முகாமையாளர்களுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாக கருதப்பட்டது. இது அவர்களின் விருப்பங்களுக்கு எதிராக மேற் கொள்ளும் நடவடிக்கையாக கருதப்பட்டது மட்டுமன்றி சோம்பேறிகளே குறைந்தபட்ச கொடுப்பனவைக் கேட்பார்கள் என்று வேதனம் மறுக்கப்பட்டது. இருந்தபோதும் இந்திய அரசாங்கம் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச கொடுப்பனவு வழங்குவதை நிர்ணயிக்கத் தவறுமாயின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டியேற்படும் என்ற தொடர்ச்சியான மிரட்டல் கள் காரணமாக 1927 ம் ஆண்டு இந்திய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேதனச் சட்டம் (The Minimum Wages(Indian Labour) Ordinance 1927) கொண்டு வரப்பட்டதாக வலியுறுத்தல்கள் உள்ளன. இந்திய தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு கொண்டு வரப்பட்ட முத லாவது சட்டமும் இதுவாகும் என்பதும் குறிப் பிடத்தக்கதாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வானது கூட்டு ஒப்பந்த நடைமுறைக்கு முன்னதாக சம்பள நிர்ணய சபையின் மூலமாகவே தீர்மானிக்கப்பட்டு வந்தது. எனினும் இதில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக கூட்டு ஒப்பந்த முறைக்கு வலுசேர்க்கப் பட்டதும் தெரிந்ததேயாகும். எனினும் பிற் காலத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் விமர்சனங்கள் மேலெழுந்த நிலையில் இதனை ஒரு ‘மரண சாசனம்’ என்றும் சிலர் கண்டித் திருந்தனர். இதேவேளை கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்களை தோட்ட நிர்வாகம் அடிக்கடி மீறிவருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தி வந்த நிலையில் இருசாராருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகளும் தலை தூக்கின. அரசியல் தொழிற்சங்கவாதிகளும் இதன்போது தொழிலாளர்களுக்கு சார்பாக குரல் கொடுத்திருந்தனர். இத்தகைய பல இடையூறுகளுக்கும் மத்தியில் தோட்டத் தொழிலாளர் களுக்கான சம்பள உயர்வு அவ்வப்போது பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனிடையே சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நான்கு பேரைக் கொண்ட ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு ஆகக் குறைந்த நாளாந்த வரு மானம் 2321 ரூபாவாக காணப்பட வேண்டும் என்று பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று புலப்படுத்து கின்றது.
சம்பள நிர்ணய சபை
இந்நிலையில் அண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதன் பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார். எனினும் 1700ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை சாதகமாக்கிக் கொள்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமாக அமைந்தது விடவில்லை. கம்பனிகள் இத்தொகையை வழங்குவதற்கு உடன்படாத நிலையில் இதற்கென தனது பக்க நியாயங்கள் பலவற்றையும் முன்வைத்திருந்தன. தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி போன்ற பல காரணங்களையும் கம்பனியினர் இதன்போது முன்வைத்திருந்தனர். இதனிடையே 150வருட வேதன முறையை மாற்றியமைக்க வேண்டுமென்று கம்பனிகள் வலியுறுத்தியதுடன் வருமான பங்கீட்டு முறைக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.
எவ்வாறெனினும் 1700 ரூபா சம்பள உயர்வு என்பது ஒரு கானல் நீராக இருந்து வந்த நிலையில் எதிர் தரப்பினரும் பல்வேறு வாத பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். இதனிடையே பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபாவை வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எச்.கே.கே.ஜயசுந்தர தலைமை யில் நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக் களத்தில் கடந்த திங்கட்கிழமை (12) கூடியபோதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய 1350 ரூபா அடிப்படை சம்பளம், 350 ரூபா உற்பத்தித்திறன் கொடுப்பனவையும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 09 பேர் வாக்களித்திருந்தனர். இதேவேளை 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாயின் தம்மால் முன்வைக்கப்படும் நான்கு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளு மாறு முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தி இருந்தது. அவற்றில் முதலாவது தேயிலை, இறப்பர் உற்பத்தி மற்றும் உற்பத்தி தொழில் களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 3 வருடங்களுக்கு 1350 ரூபாவை வழங்க வேண்டும். இந்தத் தொகைக்கு மாத்திரமே ஊழியர் சேமலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மேலதிக கிலோவுக்கும் 50 ரூபா வழங்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளிக்கு அவர் நாள்தோறும் பறிக்கும் கிலோவுக்கு மேல் ஊதியம் வழங்கப்படும் தொகை வரையறுக்கப்படவில்லை. அது பறிக் கப்பட்ட கிலோவுக்கு மேல் 350 ரூபாவுக்கு அதிகமாகவும் இருக்கலாம். தொழிலாளர்கள் மூன்று வருடங்கள் முடிவடைவதற்கு முன் எந்த விதத்திலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக் கவோ மீண்டும் சம்பள உயர்வைக் நோர்வே முடியாது போன்ற நிபந்தனைகளை சம்மேளனம் முன்வைத்தது. எனினும் அவர்கள் முன்வைத்த யோசனைகளை ஏற்க முடியாதென 07 தொழிற்சங்கங்கள் ஏகமனதாக தீர்மானித்தன.
70 வீத அதிகரிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளம் என்பதே ஒரு வெற்றியாகும். இதனூடாக மாதத்தில் 20 நாட்கள் அவர்கள் வேலை செய்தால் 7000 ரூபா கடந்த காலத்தைக் காட்டிலும் அவர்களுக்கு மேலதிகமாகக் கிடைக்கின்றது. வேலை நாட்கள் அதிகரிக்கப்படுகையில் இத்தொகையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும். இது சாதக விளைவேயாகும் என்ற ரீதியில் இது குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். முன்னாள் பிரதியமைச்சர் வி.புத்திரசிகாமணி இச்சம்பள உயர்வு தொடர்பில் மேலும் பல விடயங்களையும் சுட்டிக்காட்டுகின்றார்.
1700 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை சாத்தியமாகியுள்ளது. இது 70 வீத சம்பள அதிகரிப்பாகும். இதனடிப்படையில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன உள்ளடங்கலாக நாட்சம்பளமாக தொழிலாளியொருவருக்கு 1904 ரூபா கிடைக்கப்பெறுகிறது. அத்தோடு சேவைகாலப் பணத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப சேவைகாலப் பணமானது 90 ரூபாவில் இருந்து 1320 ரூபாவாக உயர்வ டைந்துள்ளது என்று புத்திரசிகாமணி கூறியுள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் ஜீவன் ஆகியோருக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை செங்கொடிச் சங்கம் உட்பட 3 தொழிற்சங்கங்கள் 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தன. எவ்வாறெனினும் சமகால அடிப்படை சம்பள அதிகரிப்பின் அடிப்படையில் தொழிலாளியொருவர் மாதாந்தம் குறைந்த பட்சம் 7000 ரூபாவை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமேயாகும். இதனால் மேலும் பல நன்மை களுக்கும் அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீண் விதண்டாவாதங்களால் கிடைக்கக்கூடிய நிலையிலுள்ள இச்சம்பள உயர்வை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் யாரும் ஈடுபடுதல் கூடாது. இதேவேளை காழ்ப்புணர்ச் சியை மையப்படுத்தி தொழிலாளர்களை உசுப்பேத்தி அவர்களை பிழையான வழிகளில் திசைதிருப்ப எவரும் முனைதல் கூடாது. இத் தகைய முரண்பாடான செயற்பாடுகளால் தொழி லாளர்களின் வறுமை நிலை மேலோங்குவதற்கு நாமே உடந்தையாகிவிடு வோம் என்பதோடு ‘நமக்கு நாமே குழி பறித்தவர்கள்’ என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாகிவிடுவோம்.