வடக்கிலும், கிழக்கிலும், அரச படைகள், பௌத்த தேரர்கள் மற்றும் கட்டமைப்புக்கள், வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனக் கட்டமைப்புக்கள் ஏட்டிக்குப் போட்டியாக காணிகளை கபளீகரம் செய்து வருகின்றமை தொடர்கதையாகவே இருக்கின்றன.
அவ்வாறான நிலையில் வெளியிடப்பட்டுள்ள ‘காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவுக்கு அமைவாக மார்ச் 28ஆம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ள காணிகள் குறித்த உரித்துக்கள் உறுதி செய்யப்படாதவிடத்து கட்டளைச்சட்டத்தின் (5)1இற்கு அமைவாக அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அவைபற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்ற வர்த்தமானியில் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை உற்று நோக்குகின்றபோது தற்போதைய அரசாங்கத்தின் சூட்சுமமான மற்றொரு நோக்கத்தையும் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். அந்த நோக்கம் தமிழ் மக்களின் இருப்பையும், வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் அதிபயங்கரமானதும் கூட.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு, கிராமசேவர் பிரிவுகளும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் உள்ள கரையோர கிராமங்கள், யாழ்ப்பாணம் மருதங்கேணியில் உள்ள கரையோரக் கிராமங்கள் மற்றும் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்றின் ஒருபகுதியைச் சேர்ந்த கிராமங்கள் அடையாளமிடப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்திருக்கும் விடயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் போரின் கோரத்துக்கு உள்ளானவை. அங்கு மக்கள் தொகை குறைவு. மீள்குடியேறி இருப்பவர்கள் கூட உரிய ஆவணங்களை வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இதனைவிடவும் மேற்படி பகுதிகளில் வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்தும் இருக்கின்றார்கள். அவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தங்களின் காணி உரித்தை உறுதிப்படுத்துவது என்பது காணல் நீரான விடயம்.
ஆகவே, அடையாளமிடப்பட்ட காணிகளை நிச்சயம் கையகப்படுத்த முடியும் என்ற பெரு நம்பிக்கை அரசாங்கத்துக்கு நன்றாகவே உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் சூட்சுமத்திட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஒவ்வொன்றாக நோக்கினால் அடையாளம் காண்பதற்கு இலகுவாக இயலுமானதாக இருக்கும்.
கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 72கிலோமீற்றர் நீளமான ஆழ்கடலை அடியொற்றிய கடற்கரை நிலங்கள் காணப்படுகின்றன. அம்பலவன்பொக்கனை கிராம சேவகர் பிரிவின் சாலை கிராமத்திலிருந்து வட்டுவாகல் வரையில் 21 கிலோமீற்றர்களும், வட்டுவாகலில் இருந்து கொக்குத்தொடுவாய் வரையில் 51 கிலோமீற்றர்களும் உள்ளன.
இதற்குள் அம்பலவன் பொக்கனை, சாலை, புதுமாத்தளன், வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளமுள்ளிவாய்க்கால் உள்ளிட்ட கரையோரக் கிராமங்களும் உள்ளடக்குகின்றன. ஏற்கெனவே 2007ஆம் ஆண்டு வெளியான மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கொக்குகிளாய் முதல் வட்டுவாகல் வரையிலான பகுதி நீட்டிக்கப்பட்ட ‘மகாவலி எல்’ வலயத்துக்குள் வலிந்து உட்புகுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் எஞ்சியிருக்கின்ற ஆழ்கடலை மையப்படுத்திய கடற்கரை காணிகளை கையகப்படுத்துவதற்காகவே தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையாகின்றபோது, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற 72 கிலோமீற்றர் நீளமான ஆழ்கடல் கடற்பரப்பைக் கொண்ட நிலங்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாகச் சென்றுவிடும்.
அடுத்ததாக, தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை வரலாறு நெடுகிலும் அடையவிடாது தடுப்பதற்காகவே கொக்குத்தொடுவாயில் கடற்கரையோரமாக 213 தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு முல்லைக்கடலில் சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் உட்பட ‘தாராளமாக’ கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கடற்படையும் அதற்கான ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்கிவருகின்றது.
அப்படியிருக்கையில், எஞ்சிய ஆழ்கடலை மையப்படுத்திய கடற்கரைக் கிராமங்களின் நிலங்களை அரசுடமையாக்குவதன் மூலமாக மேலும் திட்டமிட்ட தென்னிலங்கை சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான ஏதுநிலைமைகளை இலகுவாக உருவாக்க முடியும். அத்தோடு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மட்டுமல்ல முல்லைத்தீவின் குடிப்பரம்பலையும் மாற்றியமைக்க முடியும். அதனை தற்போதைய அரசாங்கமும் விரும்புகின்றது என்பதற்கு வன்னி மாவட்டத்துக்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தேர்தல்காலச் செயற்பாடுகள் சான்றுரைக்கின்றன.
முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாயில் இருந்து கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி, யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி வரையில் அடையாளமிடப்பட்ட கரையோரக் காணிகள் கையகப்படுத்தப்பட்டால் ‘வடபிராந்தியத்தின் கிழக்கு கடற்பகுதி’ அரசாங்கத்தின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.
குறித்த பகுதிக்குள் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதரத்தை பேணும் கடல்வளம் கொழிக்கும் கடற்பரப்பைத் தாண்டி ‘கனிம வளங்கள்’ நிறைந்த கடற்கரையோரங்களும் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதனைவிடவும்,‘திருகோணமலை கொக்கிளாய்-கொக்குத்தொடுவா ய்-முல்லைத்
தீவு-முள்ளிவாய்க்கால்-அம் பலன்பொக்கனை- சாலை-சுண்டிக்குளம்-மரு தங்கேணி-பருத்தித் துறை’ வரையில் கடற்கரையை அண்மித்ததாக தரைவழி வீதியொன்றை அமைப்பதற்கான திட்டம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் உள்ளது.
பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை வரையிலான இந்த வீதியமைப்பு திட்டம் தற்போது கிடப்பில் இருந்தாலும் போரின் பின்னரான சூழலில் கொக்குத்தொடுவாயிலிருந் து புல்மோட்டைக்கு பாலம் அமைக்கும் திட்டத்துக்கு சமாந்தரமாக ‘இந்திய’ தரப்புக்களால் ஒருசில சந்தர்ப்பங்களில் விருப்புடன் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டது. களவிஜயங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
அப்படியிருக்கையில், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுக்கும், இலங்கை, ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடகிழக்குக்கும் முழுமையான எதிர்நிலைப்பாட்டில் உள்ள ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. ஆகவே தான் பருத்தித்துறை, திருகோணமலை கரையோர வீதித் திட்டத்தினை அடையாளமின்றி சிதைப்பதற்கு ‘காணி’ சுவீகரிப்பு நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுக்கின்றது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதேநேரம் மன்னாரில் அருவியாறுக்கு அண்மித்த பகுதி அடையாளமிடப்பட்டுள்ளது. அது ‘கீழ் மல்வத்து ஓயா’ திட்டத்தின் அங்கத்துக்குள் வருகின்ற நிலப்பரப்பாகும். ஆகவே, மல்வத்து ஓயா திட்டத்தினை தடையின்றி முன்னெடுப்பதற்கு முன்னேற்பாடாகவே அண்மித்த பகுதிகளில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டை பார்க்க வேண்டியுள்ளது.
அநுர அரசாங்கம் உட்பட சிங்கள தேசியத்தின் மேற்படி பல்நோக்கு இலக்குகளைக் கொண்ட வர்த்தமானி மீளப்பெறப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களினதும், தமிழ்த் தேசத்தினதும் இருப்பு உறுதி செய்யப்படும்.
ஆகவே, வர்த்தமானி விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சரி, சிவில் அமைப்புக்களும் சரி, தமிழ் மக்களும் சரி, நெகிழ்ச்சித் தன்மையை காண்பிக்கவே முடியாது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வர்த்தமானியை மீளப்பெறுவதில் எள்ளளவும் ஆர்வமில்லை.
விசேடமாக, அரச அதிகாரிகளுக்கு இந்த வர்த்தமானியை மீளப்பெறுவதில் சிறிதளவேனும் உடன்பாடில்லை. பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் வடக்கு,கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அதற்கொரு சான்றாதாரம். அதன் பின்னர் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடிப்படையாக வைத்து வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனையை காணி அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபரிடம் கோரியிருக்கின்றார்.
அரசியல் ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட் டால் வர்த்தமானியை மீளப்பெறுவதொன்றும் பெரிய விடயமல்ல. அதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டிய அவசியமும் இல்லை.
இங்கே சட்ட மா அதிபரின் ஆலோசனை யைப் பெற முனைவதன் நோக்கம் ஒன்று காலத்தைக் கடத்துவது, இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என் பதை சட்ட மா அதிபர் ஊடாக வெளிப்படுத்தி மீளப்பெறுவதை தவிர்ப்பது.
அரசாங்கத்தின் குறித்த எளிய நகர்வினைக் கூடக் கணிக்க முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் சட்டம் தெரிந்த தலைவர்களான சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் ஏட்டிக்குப்போட்டியாக வர்த்தமானி மீளப்பெறப்பட்டுவிட்டது என்ற தொனி யில் அதற்கு தாமே காரணம் என்றுரைத்து ஊடக சந்திப்புக்களை நடத்தி உரிமைகோரவே விளைந் திருக்கின்றார்கள்.
வெளியாகியிருக்கின்ற வர்த்தமானி நடை முறைக்கு வருவதற்கு இன்றிலிருந்து இன்னும் 14 நாட்கள் (28–06–2025) தான் இருக்கின்றன. இந்த விடயம் சட்ட ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக, தமிழ்த் தேசமாக ஒருங்கிணைந்து அணுகப்பட வேண்டியது. தவறினால் தலையெழுத்தே மாறி விடும், தமிழ் மக்களினது மட்டுமல்ல… அரசியல், சிவில் தலைவர்களினதும் கூட.
முற்றும்.