Tamil News
Home செய்திகள் காணாமல் போனோர் தொடர்பாக வாதாடிய வழக்கறிஞருக்கு தடை

காணாமல் போனோர் தொடர்பாக வாதாடிய வழக்கறிஞருக்கு தடை

போர்க் குற்றம் தொடர்பான இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளில் தமிழருக்காக வாதாடி வந்த வழக்கறிஞர் குருபரனுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதிமன்றத்தில் காணாமல் போனோரின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்குகளில் காணாமல் போனோர் சார்பில் வாதாடி வந்த கலாநிதி குமாரவடிவேல் குருபரனிற்கு வழக்குகளை விசாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதிமன்றில் இடம்பெறும் பொது நல வழக்குகளில் இவர் வாதாடி வருகின்றார். இவர் வாதிடும் வழக்குகள் தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் இவர் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். தற்போது குருபரன் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் வாதிடுவதற்கு இலங்கை பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை எதிர்த்து குருபரன் நீதிமன்றில் வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

போர்க் குற்ற வழக்குகளில் இராணுவத்தினரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியதாலேயே தற்போது இவருக்கு இந்தத் தடை விதிக்கப்படுகின்றது என கருதப்படுகின்றது.

 

Exit mobile version