காசா பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது – குழந்தைகள் உட்பட 67 பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலி

இஸ்ரேல் இராணுவத்தினர் நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலின் காவல்துறையினர்  மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது   தாக்குதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில்,  பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட 67 பேர் பலியாகியுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் ஹமாஸ்  இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மாகாணங்களுக்கான அமெரிக்க அரசின் செயலர் அந்தோணி பிளிங்கின், பதற்றமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத் தலைவர் மஹ்-மௌத் அப்பாஸிடம் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் காசா பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் வரும் மே 14ம் திகதி  அன்று நடத்தப்பட வேண்டும் ன துனிசியா,நோர்வே,சீனா ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ஜான்சன், “வளர்ந்து வரும் வன்முறை மற்றும் பொது மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து பிரித்தானிய அரசு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மேலும் அதிகரிக்கும் பதட்டம் உடனடியாக தணிவதை காண விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.